60 சதவீதம் முடிந்த ஒத்திவாக்கம் மேம்பால பணி வரும் மார்ச்சில் பயன்பாட்டிற்கு திறக்க நடவடிக்கை
செங்கல்பட்டு:ஒத்திவாக்கம் ரயில்வே மேம்பால கட்டுமானப் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அனைத்து பணிகளும் முடித்து, வரும் மார்ச் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என, நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.செங்கல்பட்டு அடுத்த ஒத்திவாக்கம் -- பொன்விளைந்தகளத்துார் இடையே, ரயில்வே கடவுபாதை உள்ளது. இப்பகுதி கிராமவாசிகள் பணி, பள்ளி, கல்லுாரி, அரசு மருத்துவமனை உள்ளிட்ட அத்தியவாசிய தேவைக்கு, அரசு பேருந்துகள் மற்றும் பிற வாகனங்களில் செல்கின்றனர்.அப்போது, ரயில்வே கடவுப்பாதையை கடந்து தான் செல்ல வேண்டும். ரயில் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில், அடிக்கடி ஒத்திவாக்கம் ரயில்வே கடவுப்பாதை மூடப்படுகிறது. இதனால், சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், மேம்பாலம் கட்ட வேண்டும் என, மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்தனர்.அதன் பின், ரயில்வே துறையினர் கடவுப்பாதை வழியாக கடந்து செல்லும் வாகனங்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தியதில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்வதை உறுதிப்படுத்தினர்.இதனால், ரயில்வே மேம்பாலம் கட்டலாம் என, உயரதிகாரிகளிடம், ரயில்வே துறையினர் பரிந்துரை செய்தனர். இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு -- ஒத்திவாக்கம் ரயில்வே நிலையங்களுக்கு இடையே, 2011 --12ம் ஆண்டு, 30 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பில், மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன், தண்டவாள பகுதியில் மேம்பாலப் பணியை, ரயில்வே நிர்வாகம் முடித்தது.ஆனால், நெடுஞ்சாலைத் துறையினர் மேம்பாலம் அமைக்கும் பணியை துவக்காமல் கிடப்பில் போட்டனர். கடந்த 2018ம் ஆண்டு, 33 கோடியே 24 லட்சம் ரூபாய் ஒதுக்கி, அரசு தொழில்நுட்ப அனுமதி வழங்கியது. அதன் பின் இப்பணிக்கு, 2022ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி, ஒப்பந்த அறிவிப்பு வெளியிட்டது.பின், 2022 ஆகஸ்டில், மேம்பாலப் பணிக்கு, 26 கோடியே 58 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது. இப்பணியை, ஈரோடைச் சேர்ந்த நிறுவனத்திற்கு, நெடுஞ்சாலைத் துறையினர் வழங்கினர்.இதைத்தொடர்ந்து, ரயில்வே மேம்பாலப் பணி, கடந்த 2023 மார்ச் 12ம் தேதி துவக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.ரயில்வே கடவுப்பாதையில் இருந்து, திருக்கழுக்குன்றம் சாலை பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளது.இப்பகுதியில், மழைநீர் கால்வாய் மற்றும் மேம்பாலத்துடன் ரயில்வே தண்டவாளம் பகுதியில் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.ஒத்திவாக்கம் பகுதியில், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், மேம்பாலப் பணிகள் துவங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேணடும் என, வாகன ஓட்டிகள் மற்றும் கிராமவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இப்பணிகள் அனைத்தும் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு வரும் மார்ச் மாதம் மேம்பாலம் கொண்டுவரப்படும் என, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.ஒத்திவாக்கம் ரயில்வே மேம்பாலப் பணி, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், கிராமவாசிகள் குறித்த நேரத்திற்கு பணி, பள்ளி, மருத்துவமனை உள்ளிட்டவற்றுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். பாலப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம்.செல்வகுமார்,பொன்விளைந்தகளத்துார்.ஒத்திவாக்கம் ரயில்வே மேம்பாலப் பணி 60 சதவீதத்திற்கும் மேல் முடிந்துள்ளது. மற்ற பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் முடித்து, வரும் மார்ச் மாதம் மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.- வி.பி.நாராயணன்,கோட்ட பொறியாளர்,நெடுஞ்சாலைத்துறை.