வெள்ளத்தால் ஆண்டுதோறும் அவதி திருப்புறக்கோவிலில் பாலம் அவசியம்
செய்யூர்:செய்யூர் அடுத்த திருப்புறக்கோவில் கிராமத்தில், பவுஞ்சூர் -- செய்யூர் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.இரண்யசித்தி, செங்காட்டூர், புதுப்பட்டு, அம்மனுார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இச்சாலையை பயன்படுத்துகின்றனர்.தினமும், நுாற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் கடந்து செல்கின்றன.இதில், திருப்புறக்கோவில் பேருந்து நிறுத்தம் அருகே, ஆண்டுதோறும் மழைக்காலத்தில் செங்காட்டூர், அரியனுார், நெமந்தம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் செல்ல வழியின்றி, சாலையில் பெருக்கெடுத்து பாய்வதால், போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது.இதையடுத்து, வெள்ளப்பெருக்கால் சாலை சேதமடைவதை தடுக்க, திருப்புறக்கோவில் பகுதியில் கடந்தாண்டு, நெடுஞ்சாலைத் துறை வாயிலாக 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சாலையோரத்தில் தடுப்பு அமைக்கப்பட்டது.ஆனால், கடந்த பருவமழையின் போது, புதிதாக அமைக்கப்பட்ட சாலையோர தடுப்பு முழுதும் வெள்ளத்தால் சேதமடைந்து, சாலை ஓரத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டது.பல ஆண்டுகளாக மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இந்த பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, பெரும் விபத்து ஏற்படும் முன், திருப்புறக்கோவில் பகுதியில் உயர் மட்ட பாலம் அமைக்க, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.