சிங்கபெருமாள்கோவில் மேம்பாலம் வரும் 19ல் தாம்பரம் மார்க்கம் திறப்பு?
சிங்கபெருமாள் கோவில்:செங்கல்பட்டு புறநகர் பகுதிகளில், வளர்ந்து வரும் நகரம் சிங்கபெருமாள்கோவில்.இங்கு சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையில் உள்ள ரயில்வே கேட் பகுதியில், தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள், ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு சென்று வருகின்றன.மேலும் சுற்றியுள்ள திருக்கச்சூர், தெள்ளிமேடு, ஆப்பூர், கொளத்துார் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த வழியாக தினமும் சென்று வருகின்றனர்.இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, கடந்த தி.மு.க., ஆட்சியில், 2008ம் ஆண்டு ரயில்வே மேம்பால பணிகள் துவங்கப்பட்டன.கடந்த 2011ம் ஆண்டு ஆட்சி மாற்றம், ஜி.எஸ்.டி., சாலை எட்டு வழிச் சாலையாக விரிவாக்கம், ரவுண்டானா அமைப்பதில் மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களால், 10 ஆண்டுகளுக்கும் மேலாக மேம்பாலப் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.மீண்டும் 2021ல் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், மீண்டும் ஒப்பந்தம் விடப்பட்டது. 138.27 கோடி ரூபாய் மதிப்பில், கடந்த 2021 நவம்பரில், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு தலைமையில், பூமி பூஜை போடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன.தற்போது, தாம்பரம் மார்க்கத்தில் பணிகள் முடிவடைந்து, ஒருபுறம் மட்டும் திறக்கும் வகையில் மின் விளக்குகள், வழிகாட்டி பலகைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு உள்ளன.பணிகள் முடிவடைந்த பகுதியை, வரும் 19ம் தேதி மதியம், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்று திறந்து வைக்க உள்ளதாக, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.