ஒளிரும் பூங்கா இடத்தை சுற்றுலா கழகத்திற்கு தராமல்... இழுத்தடிப்பு:வருமானத்தில் மாமல்லை நகராட்சி பங்கு கேட்பதால் சிக்கல்
மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஒளிரும் பூங்கா அமைவிடத்தை, சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திடம் ஒப்படைக்க, வருவாய்த்துறை முயன்று வருகிறது. ஆனால் நகராட்சி நிர்வாகம், பூங்கா வருமானத்தில் பங்களிப்பு கேட்டு இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாமல்லபுரத்தில், பல்லவர் கால சிற்பங்கள் வெவ்வேறு இடத்தில் அமைந்துள்ளதால், சுற்றுலா பயணியர் நீண்ட துாரம் நடந்து களைப்படைகின்றனர். அவர்கள் இளைப்பாற, புல்வெளியுடன் பூங்கா அமைக்க வேண்டுமென, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், இங்குள்ள தொல்லியல் துறை அலுவலகம் அருகே, 60 லட்சம் ரூபாய் மதிப்பில், 2.47 ஏக்கர் பரப்பில், 2009ம் ஆண்டு,'மரகத பூங்கா'வை அமைத்தது. துவக்கத்தில் இந்த பூங்காவில், வார இறுதி நாட்களில் சுற்றுலாத்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அப்போது மட்டும் பயணியரை அனுமதித்து, மற்ற நேரத்தில் பூங்கா மூடப்பட்டது. நாளடைவில், நிகழ்ச்சிகள் நடத்தப்படாமல், பூங்கா பராமரிப்பின்றி சீரழிந்தது. பிரதமர் மோடி - சீன அதிபர் ஷீ ஜின்பிங் ஆகியோர், 2019ல் இங்கு சந்தித்தனர். இதற்காக, அப்போதைய பேரூராட்சி நிர்வாகம், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய புல்வெளி, அலங்கார செடிகள் வைத்து பூங்காவை புதுப்பித்தது. இதன் பின்பும், பயணியரை அனுமதிக்காததால், பயனின்றி மீண்டும் வீணானது. முடிவு
இதையடுத்து, பூங்காவை மேம்படுத்தி சுற்றுலா பயணியர் பார்வைக்கு அனுமதிக்க வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்தது. இதனால், தனியார் பங்களிப்புடன் 'ஒளிரும் பூங்கா' அமைக்க, சுற்றுலா வளர்ச்சிக் கழகம் முடிவெடுத்தது. அதன்படி, தனியாருடன் சேர்ந்து, 2023 செப்டம்பரில், ஒளிரும் பூங்கா அமைக்க பூமி பூஜை நடத்தப்பட்டது. தனியார் ஒப்பந்த குளறுபடியால் பணிகள் தாமதமான நிலையில், அதன் பின் சிக்கல் தீர்ந்தது. இதையடுத்து கடந்தாண்டு செப்டம்பரில், பழைய பூங்காவை முற்றிலும் அழித்து, 'ஒளிரும் பூங்கா' அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டன. ஓராண்டு கடந்த நிலையில், தற்போது பணிகள் அனைத்தும் முடிக்கப் பட்டுள்ளன. ஆனால், இப்பூங்கா அமைவிடத்தை, சுற்றுலா வளர்ச்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க, அனுமதி தீர்மான ஒப்புதல் அளிக்கப்படாமல் உள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பூங்கா அமைந்துள்ள இடம், வருவாய்த்துறை பதிவேட்டில், 'தோப்பு புறம்போக்கு' என பதியப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் இங்கு இயங்கிய அரசு கட்டட, சிற்பக்கலை கல்லுாரி, இந்த இடத்தை பயன் படுத்தியது. இக்கல்லுாரி கிழக்கு க டற்கரை சாலை பகுதிக்கு மாற்றப்பட்டது. அதன் பின், இவ்விடத்தை சுற்றுலா வளர்ச்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்து, 15 ஆண்டுகள் கடந்தும், தற்போதும் வருவாய்த்துறை பதிவில், தோப்பு புறம்போக்கு என்றே தொடர்கிறது. கடிதம்
சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாகம் பெயருக்கு இந்த இடத்தை மாற்றி பதிவு செய்ய தீர்மான அனுமதி கோரி, நகராட்சி நிர்வாகத்திடம், வருவாய்த்துறை கடிதம் அளித்துள்ளது. அதன்படி தற்போது, மூன்றாம் முறையாக கடிதம் அளித்தும், நகராட்சி நிர்வாகம் முறையான பதில் அளிக்கவில்லை என, வருவாய்த் துறையினர் தெரிவிக்கின்றனர். ஒளிரும் பூங்கா வருமானத்தில் 20 சதவீதத்தை வழங்குமாறு, நகராட்சி நிர்வாகம் கேட்டுள்ளது. இதற்கு, சுற்றுலா வளர்ச்சி நிர்வாகம் மறுத்துள்ளது. இதனால் தான், இடத்தை ஒப்படைப்பதில் சிக்கல் நீடிப்பதாக கூறப்படுகிறது. இதனால், ஒளிரும் பூங்காவை பயணியர் பயன்பாட்டிற்கு துவக்குவதும் தாமதமாகிறது. ஒளிரும் பூங்காவில் என்ன இருக்கு? சிங்கம், புலி, மான், முயல் உள்ளிட்ட விலங்குகள், மயில், கொக்கு உள்ளிட்ட பறவைகள், தேனீக்கள், வண்டுகள், பல வண்ண மலர் செடிகள் உள்ளிட்டவை எல்.இ.டி., விளக்கொளியில் பிரகாசிக்கும். தண்ணீர் பூங்கா, செயற்கை நீரூற்று ஆகியவை மின்னொளியில் ஒளிரும். சிறுவர் விளையாட்டு சாதனங்கள், ரயில் இயக்கம், '5டி' தியேட்டர், உணவகம் ஆகியவையும் ஒளிரும் பூங்காவில் உள்ளன.