வலுவிழந்த புதுப்பட்டு பாலம் ரூ.80 லட்சத்தில் பராமரிப்பு
சூணாம்பேடுசூணாம்பேடு பகுதியில் இருந்து ஆலத்துார் வழியாக திண்டிவனம் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. இது செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு மாவட்டங்களை இணைக்கும் சாலையாக உள்ளது.இச்சாலையை புதுப்பட்டு, புதுகுடி, விளாம்பட்டு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்துகின்றனர். சாலை நடுவே புதுப்பட்டு ஓடையை கடக்கும் பாலம் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இது பராமரிப்பு இன்றி துாண்கள் பலவீனமடைந்து உள்ளது. பாலம் முழுமையாக உடைந்தால், 15க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பாதிக்கப்படுவர். எனவே, பழுதடைந்த பாலத்தை சீரமைக்க, அப்பகுதியினர் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். இதையேற்று, மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், 80 லட்சம் ரூபாயில் பாலத்தை சீரமைக்க முடிவு செய்து, டெண்டர் விடப்பட்டு உள்ளது. முதற்கட்டப்பணிகள் துவங்கப்பட்டு சாரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.சீரமைப்புப் பணியின் போது, பாலத்தின் துாண்கள் மற்றும் சுவர்கள் பலப்படுத்தப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.