புறவழிச்சாலையில் பதறவைத்த இளசுகளின் வீலிங் சாகசம்
அம்பத்துார்,சென்னை புறவழிச்சாலையில், இளைஞரின் 'வீலிங்' சக வாகன ஓட்டிகளை பதற வைத்தது. வண்டலுார் - புழல் சென்னை புறவழிச்சாலையில், தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையில், இளைஞர்கள் 'பைக் ரேஸ், வீலிங்' உள்ளிட்ட சாகசங்கள் மேற்கொள்வது, சமீபமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சென்னை புறவழிச்சாலையில், அம்பத்துார் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகே இளைஞர்கள் சிலர் முன் சக்கரத்தை துாக்கியபடி, 'வீலிங்' செய்து அபாயகரமாக பைக் ஓட்டியது சக வாகன ஓட்டிகளை பதற வைத்தது. இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ''அபாயகரமான வகையில் இளைஞர்கள் பைக் ஓட்டுவதால், சக வாகன ஓட்டிகளுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்துகிறது. இளைஞர்கள் போலீசார் முன்னிலையிலேயே, வாகனத்தில் சாகசம் செய்கின்றனர். இது போன்ற செயல்களில் ஈடுபடும் இளைஞர்களை கைது செய்து, வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்,'' என்றனர்.