மகளிர் விடுதி செப்டிக் டேங்க் நிரம்பி தெருவில் வழிந்தோடும் கழிவுநீர்
கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, நெல்லிக்குப்பம் பிரதான சாலை, டிபன்ஸ் காலனி நான்காவது தெருவில், 'தோழி' பணிபுரியும் பெண்கள் தங்கும் விடுதி உள்ளது.இந்த விடுதியை, சமூக நலத்துறை சார்பில் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் பராமரித்து வருகிறது.நான்கு மாடி கட்டடத்தில் செயல்படும் இந்த விடுதியின் அருகிலேயே, கூடுவாஞ்சேரி சார் - பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு, தினமும் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.இந்நிலையில், அதன் அருகில் உள்ள மகளிர் தங்கும் விடுதியில் உள்ள செப்டிக் டேங்க் நிரம்பி, அதன் கழிவுநீர் சார் - பதிவாளர் அலுவலகம் முன், 15 நாட்களுக்கும் மேலாக வழிந்தோடுகிறது.இதனால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படும் அவல நிலை உள்ளது.இதுகுறித்து மகளிர் விடுதி மேலாளர் கூறியதாவது:மகளிர் தங்கும் விடுதியில், தற்போது 120க்கும் மேற்பட்டோர் தங்கி, பணிபுரிந்து வருகின்றனர். இப்பகுதிக்கு, கழிவுநீர் கால்வாய் மற்றும் பாதாள சாக்கடை வசதி இல்லை.அதனால், குளிப்பது, துணி துவைப்பது உள்ளிட்ட அனைத்து கழிவுநீரும், இங்குள்ள செப்டிக் டேங்கிற்கு செல்லும் வகையில் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமானோர் தங்கியுள்ளதால், தினமும் செப்டிக் டேங்க் நிரம்பி வழிகிறது.வாரம் மூன்று முறை, தனியார் கழிவுநீர் வாகனம் வாயிலாக வெளியேற்றுகிறோம். இருப்பினும், கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க முடியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:மக்களின் புகாரை தொடர்ந்து, மகளிர் தங்கும் விடுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, சாலையில் விடாமல் உடனுக்குடன் வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இதன் அருகிலேயே பள்ளிகள் உள்ளன. கழிவுநீர் வழிந்தோடும் இந்த தெருவையே பள்ளி செல்லும் மாணவ - மாணவியர் பயன்படுத்துகின்றனர்.பெரிய அளவில் சுகாதார சீர்கேடு ஏற்படும் முன், விரைவில் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.