உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மின்னொளியில் மாமல்லை சிற்பங்கள் சுற்றுலா ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

மின்னொளியில் மாமல்லை சிற்பங்கள் சுற்றுலா ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், பொங்கல் பண்டிகை உள்ளிட்ட விழாக்கால சுற்றுலாவை முன்னிட்டு ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட சிற்பங்கள், இரவில் மின்னொளியில் பிரகாசிக்க வேண்டுமென, சுற்றுலா ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.மாமல்லபுரத்தில், பல்லவர் கால கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு, பிற குடவரைகள் ஆகியவை உள்ளன. தொல்லியல் துறை பாதுகாத்து பராமரிக்கும் இவற்றை உள்நாடு மற்றும் சர்வதேச சுற்றுலா பயணியர் கண்டு ரசிக்கின்றனர்.இந்தியருக்கு தலா 40 ரூபாய், சர்வதேச பயணியருக்கு, தலா 600 ரூபாய் வீதம், நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஓரிடத்தில் பெறும் நுழைவுச்சீட்டில், அனைத்து சிற்பங்களையும் காணலாம்.காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை, பயணியர் சிற்பங்கள் காண அனுமதிக்கப்படுகின்றனர். இந்திய பிரதமர் மோடி - சீன அதிபர் ஷீ ஜின்பிங் ஆகியோர், கடந்த 2019ல் இங்குள்ள சிற்பங்களை கண்டு ரசித்தனர்.அதை முன்னிட்டு, கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு, வெண்ணெய் உருண்டை ஆகிய சிற்ப வளாகங்களில், பாரம்பரிய தன்மைக்கேற்ப, குறைவான ஒளி உமிழும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டன.அதைத்தொடர்ந்து, முதல்முறையாக சுற்றுலா பயணியர், இரவு 9:00 மணி வரை காண அனுமதிக்கப்பட்டனர். பின், விளக்குகள் பழுதடைந்த நிலையில், இரவில் அனுமதிப்பது தவிர்க்கப்பட்டது. மீண்டும் இரவில் அனுமதிக்க கருதி, கடந்த 2022ல் புதிய மின் விளக்குகள் அமைக்கப்பட்டன.கடந்தாண்டு ஜூலை முதல், கடற்கரை கோவிலில் மட்டும் இரவில் பயணியரை அனுமதிக்கின்றனர். பிற சிற்பங்களை இரவில் காண அனுமதி இல்லை.ஒரே கட்டணத்தில் அனைத்து சிற்பங்களையும் காண அனுமதி உள்ள நிலையில், இரவில் கடற்கரை கோவிலை மட்டுமே காணும் நிலை உள்ளது. இதற்கு, ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக கூறப்படுகிறது.வரும், 22ம் தேதி, இந்திய நாட்டிய விழா துவக்கி, ஒரு மாதம் நடக்கவுள்ளது. பள்ளிகள் அரையாண்டு விடுமுறை, ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகை ஆகியவை காரணமாக, பயணியர் குவிந்து, மாமல்லபுரத்தில் சுற்றுலா களைகட்டும்.எனவே, கடற்கரை கோவில் மட்டுமின்றி, பிற சிற்பங்களிலும் விளக்குகளை ஒளிரவைத்து, இரவில் பயணியரை அனுமதிக்க வேண்டுமென, சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ