கோவில் இடத்தில் பேரூராட்சி கட்டடம்? திருக்கழுக்குன்றத்தில் வழக்கு சர்ச்சை
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அலுவலக கட்டடம், வேதகிரீஸ்வரர் கோவில் நிலத்தில் விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ளதாக, சர்ச்சை ஏற்பட்டுள்ளது. திருக்கழுக்குன்றத்தில், 1970ல் கட்டப்பட்ட குறுகிய கட்டடத்தில், பேரூராட்சி அலுவலகம் இயங்கியது. இக்கட்டடம், நாளடைவில் பலமிழந்தது. மேலும், அலுவலக வளாகமும் குறுகியதாக இருந்தது. எனவே, புதிய கட்டடம் கட்ட முடிவெடுத்த நிர்வாகம், அப்பகுதியைத் தவிர்த்து, 200 மீட்டருக்கு அப்பால், புதிய அலுவலக கட்டடத்தை, 1.27 கோடி ரூபாய் மதிப்பில் கட்டியது. கடந்த செப்., 23ம் தேதி சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், கட்டடத்தை திறந்தார். இந்நிலையில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் வேதகிரீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில், பேரூராட்சி நிர்வாகம் விதிகளுக்கு புறம்பாக இந்த கட்டடத்தை கட்டியதாக, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால், சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, கோவில் தரப்பினரிடம் கேட்ட போது, அவர்கள் கூறியதாவது: வேதகிரீஸ்வரர் கோவில் சொத்தாக பதிவாகியுள்ள புல எண் '459பி'யில், பேரூராட்சி அலுவலகம் புதிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம், எங்களிடம் முறையான அனுமதி பெறவில்லை. இதுபற்றி துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ளதாக, தனியார் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு விசாரணை ஏற்கனவே இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்டு, வரும் 14ம் தேதி, மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.