ஜி.எஸ்.டி., சாலையில் ஆக்கிரமிப்பு கூடுவாஞ்சேரியில் போக்குவரத்து நெரிசல்
கூடுவாஞ்சேரி, நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, ஜி.எஸ்.டி., சாலையில், காலை மற்றும் மாலை வேளைகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, வார விடுமுறை நாட்களில் இது மேலும் அதிகரிக்கும். இதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்து துறை அதிகாரிகள் இணைந்து, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து, கூடுவாஞ்சேரி அடுத்துள்ள சீனிவாசபுரம் வரை உள்ள சாலையின் இருபுறங்களிலும், அணுகுசாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். இந்நிலையில், கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகம் அருகில் இருந்து, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் செல்லும் ஜி.எஸ்.டி., சாலையில், தனியார் பள்ளி அருகில் அணுகு சாலையை ஆக்கிரமித்து, புதிதாக உணவகம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் அனுமதி பெறாமல் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் விதமாக, இந்த உணவகம் அமைந்துள்ளது.இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த எஸ்.விமலா, 48, என்பவர் கூறியதாவது:கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறக்கப்பட்டதில் இருந்து, ஜி.எஸ்.டி., சாலையில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. காலையில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் போதும், மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரும் போதும், போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்படுகிறோம்.இந்நிலையில், ஜி.எஸ்.டி., சாலையில் தனியார் பள்ளி அருகில் அணுகு சாலையை ஆக்கிரமித்து, இந்த உணவகம் துவக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் வாடிக்கையாளர்கள், தங்களது பைக்குகளை சாலையிலேயே நிறுத்துகின்றனர்.இதனால், எங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது.அணுகு சாலையிலுள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றி, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.