மேலும் செய்திகள்
50 ஆயிரம் மரக்கன்றுகள்: கலெக்டர் அறிவுறுத்தல்
22-Mar-2025
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன.இங்கு, 2020ம் ஆண்டில் இருந்து, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் அரசு பள்ளி, கல்லுாரி வளாகங்கள், சாலையோரங்கள், அரசுக்குச் சொந்தமான இடங்களில், மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன.2024- 25ம் ஆண்டில், எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், 10.56 லட்சம் மரக்கன்றுகள் நட, கலெக்டர் உத்தரவிட்டார். அதன் பின், ஊராட்சிகளில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது.தொடர்ந்து, 2025 - 26ம் ஆண்டிற்கு அரசு பள்ளி, கல்லுாரிகள் மற்றும் சாலையோரங்களில், 3.04 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய, 1.57 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, நிர்வாக அனுமதியை கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார்.செங்கல்பட்டு மாவட்டத்தில், எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் வெள்ளபுத்துார், கரிக்கிலி, வேலாமூர், பொலம்பாக்கம், வன்னியநல்லுார், சீவாடி, பெரியவெளிக்காடு, கருணாகரச்சேரி, சிலவாட்டம், அஞ்சூர்.மண்ணிவாக்கம், கொண்டமங்கலம், அகரம்தென், பெரும்பாக்கம், பொன்பதர்கூடம், கொத்திமங்கலம், அழகுசமுத்திரம், அனுமந்தபுரம், காயார் ஆகிய ஊராட்சிகளில் செடிகள் வளர்க்க, நாற்றங்கால் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன.இங்கு தென்னை, முருங்கை, தேக்கு, செம்மரம், சவுக்கு, குமிழ், மகாகணி ஆகிய மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட உள்ளன.அதன்படி, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், நாற்றங்கால் பண்ணை தொடர்பாக மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலர்கள், பணித்தள பொறுப்பாளர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோருக்கு ஒரு நாள் பயிற்சி, கூடுதல் கலெக்டர் நாராயணசர்மா தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஊரக வளர்ச்சி பொறியாளர் தணிகாசலம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
22-Mar-2025