| ADDED : நவ 28, 2025 04:09 AM
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்தில், வெளிவாகனங்கள் அத்துமீறி நுழைவதால், விபத்து ஏற்படும் என பயணியர் அச்சப் படுகின்றனர். செங்கல்பட்டு, மாமல்லபுரம், கல்பாக்கம் ஆகிய பகுதிகளின் அரசுப் பேருந்துகள், திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்தில் பயணியரை இறக்கி, ஏற்றிச் செல்கின்றன. இங்கிருந்து திருப்போரூர், மதுராந்தகம் ஆகிய பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணியர் பேருந்திற்காக காத்திருக்கும் நிலையில், இருசக்கர வாகனங்கள் அத்துமீறி திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்தில் நுழைகின்றன. இந்நிலையம் குறுகியதாகவும், வணிக வளாக கடைகளுடனும் உள்ளது. கடைகளுக்குச் செல்வோர் வாகனத்தை வேகமாக, சத்தத்துடன் ஓட்டுகின்றனர். அங்கேயே நீண்டநேரம் நிறுத்துகின்றனர். இதனால், பேருந்து பயணியர் காத்திருக்கவோ, நடக்கவோ இயலாமல் பாதிக்கப்படுகின்றனர். வாகனம் மோதி விடுமோ என, பயணியர் அச்சப்படுகின்றனர். இருசக்கர வாகனங்கள் இடையூறு செய்வதால் பேருந்துகள் நுழையவும், வெளியேறவும் வழியின்றி முடங்குகின்றன. எனவே, பேருந்து நிலையத்திற்குள் வெளிவாகனங்கள் நுழைவதை தடுக்க வேண்டுமென, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.