உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாமல்லை அருகே ஆக்கிரமிப்பை அகற்றுவதில்... சிக்கல்! அதிகாரிகளை முற்றுகையிட்டு மீனவர்கள் ஆவேசம்

மாமல்லை அருகே ஆக்கிரமிப்பை அகற்றுவதில்... சிக்கல்! அதிகாரிகளை முற்றுகையிட்டு மீனவர்கள் ஆவேசம்

மாமல்லபுரம், மாமல்லபுரம் அருகே, ஹிந்து சமய அறநிலையத்துறை அறக்கட்டளைக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட மீனவர்களின் வீடுகளை, அதிகாரிகள் நேற்று அகற்ற முயன்றனர். அப்போது, அதிகாரிகளை முற்றுகையிட்டு மீனவர்கள் தகராறில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் மாமல்லபுரத்தில், நெம்மேலி ஆளவந்தார் அறக்கட்டளை இயங்குகிறது. இதற்கு சொந்தமாக மாமல்லபுரம், சாலவான்குப்பம், பட்டிபுலம், கிருஷ்ணன்காரணை, பேரூர், நெம்மேலி உள்ளிட்ட பகுதிகளில், 1,054 ஏக்கர் நிலம் உள்ளது. பட்டிபுலம் உள்ளிட்ட இடங்களில் சமூகவிரோத கும்பல், போலி ஆவணங்கள் வாயிலாக நிலத்தை அபகரிக்கவும், பிறரிடம் விற்கவும் முயற்சி நடக்கிறது. இதுதொடர்பாக, உயர்நீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை முடிவில், மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.இச்சூழலில், அறக்கட்டளைக்குச் சொந்தமான மொத்த நிலத்தையும் அளவிட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் இருவர், தனித்தனியே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இரு வழக்குகளையும் விசாரித்த நீதிமன்றம், ஒரே வழக்காக மாற்றி நிலப் பரப்பு, ஆக்கிரமிப்புகள் குறித்து கண்டறிய, கடந்த 2022ல் உத்தரவிட்டது. வருவாய்த் துறையினர் நிலத்தை அளவிட்டு, அறக்கட்டளை நிலப் பரப்பு, ஆக்கிரமிப்பு குறித்து, நீதிமன்றத்தில் அறிக்கை அளித்தனர். இதையடுத்து, நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது.அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்றத்தில், ஆக்கிரமிப்பு அகற்றும் உத்தரவை, 78ம் பிரிவின் கீழ், அறக்கட்டளை நிர்வாகம் பெற்று, அதே ஆண்டு முதல் அகற்றி வருகிறது.இதற்கிடையே, ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்படாததாக, வழக்குதாரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.இதையடுத்து, கடந்த ஆண்டு பட்டிபுலம் பகுதியிலும், கடந்த ஜூன் மாதம் சூலேரிக்காட்டிலும், மீனவர்கள் வீடுகள் கட்டி ஆக்கிரமித்துள்ள நிலத்தை, அதிகாரிகள் மீட்க முயன்றனர்.அப்போது மீனவர்கள் எதிர்த்ததால், நீதிமன்றத்தில் முறையிடுமாறு கூறி, அதிகாரிகள் கால அவகாசம் அளித்தனர்.அவமதிப்பு வழக்கு விசாரணை இன்று நடக்கவுள்ள நிலையில், அறநிலையத்துறை உதவி ஆணையர் ராஜலட்சுமி, ஆய்வாளர் பாஸ்கரன், அறக்கட்டளை செயல் அலுவலர் செல்வகுமார், பிற கோவில் செயல் அலுவலர்கள், சூலேரிக்காடு மீனவ பகுதியில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று, ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற முயன்றனர்.இப்பகுதியில், புல எண் '272/4சி'யில், அறக்கட்டளை நிலத்தில், 2.17 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டு, 39 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. ஆக்கிரமிப்பை அகற்ற முயன்ற போது, மீனவர்கள் முற்றுகையிட்டு தகராறு செய்தனர்.இதில் 37 பேர் நீதிமன்றத்தில் முறையிட்டு, தாங்கள் வாடகைதாரராக விரும்புவதாக தெரிவித்து, பரிசீலிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர். இதனால், விடுபட்ட இரண்டு வீடுகளை, அதிகாரிகள் அகற்ற முயன்றனர். அவற்றின் உரிமையாளர்கள், வாடகைதாரராக மாற நீதிமன்றத்தில் முறையிட்டு, விசாரணையில் உள்ளதாக கூறியதால் நடவடிக்கை கைவிடப்பட்டது.அதைத்தொடர்ந்து, பட்டிபுலம் புல எண் '168/25'ல், அறக்கட்டளை நிலத்தில், 1.03 ஏக்கர் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 40 மீனவ வீடுகளை அகற்ற முயன்றனர்.அவர்களும் முற்றுகையிட்டு, எல்லைப் பகுதியிலேயே அதிகாரிகளை நுழைய விடாமல் தடுத்தனர். பல தலைமுறைகளாக வசிக்கும் போது, அதே இடம் ஆளவந்தாருக்கு எப்படி சொந்தமாகும். அதற்கான ஆவணங்கள் உள்ளதா என வாதிட்டனர். மேலும், இடம் தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிடவோ, அறக்கட்டளைக்கு வாடகை அளிக்கவோ, அதற்காக உறுதிமொழி கடிதம் அளிக்கவோ முடியாது என்றும், திட்டவட்டமாக மறுத்தனர்.அதையும் மீறி வீடுகளை இடிக்க முயன்றால் தீக்குளித்தோ, கடலில் குதித்தோ தற்கொலை செய்வோம் என மிரட்டி ஆவேசப்பட்டதால், அங்கும் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை கைவிடப்பட்டது.உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, மீனவ பகுதிகளில் அறக்கட்டளை நிலத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முயற்சிக்கும் போது, மீனவர்கள் ஒருங்கிணைந்து எதிர்ப்பதால், நடவடிக்கையில் இழுபறி நீடிக்கிறது.நீதிமன்றம் முடிவெடுக்கும்உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு தான், அறக்கட்டளை இடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முயற்சிக்கிறோம். சூலேரிக்காடு மீனவர்கள், மனை வாடகைதாரர்களாக மாற சம்மதித்து உள்ளனர். அங்கு பிரச்னை இல்லை. பட்டிபுலம் மீனவர்களோ, எதற்கும் சம்மதிக்காமல் தகராறு செய்கின்றனர். இங்கு நடந்ததை நீதிமன்றத்தில் தெரிவிப்போம். நீதிமன்றம் தான்முடிவெடுக்கும்.- ஆர்.செல்வகுமார், செயல் அலுவலர், நெம்மேலி ஆளவந்தார் அறக்கட்டளை, மாமல்லபுரம்.

அறக்கட்டளை நில பரப்பு விபரம்

மொத்த பரப்பு - 1,250 ஏக்கர்கிழக்கு கடற்கரை சாலைக்காக, அறக்கட்டளை இடம், 120 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டது. மேலும், பல்வேறு மீனவ பகுதிகள் அணுகுபாதைக்காக நிலம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது எஞ்சியுள்ள பரப்பு, 1,054 ஏக்கர்மொத்த ஆக்கிரமிப்பு பரப்புபட்டிபுலம் 1.92 ஏக்கர்சூலேரிக்காடு 1.79 ஏக்கர்புதிய எடையூர் 0.56 ஏக்கர்திருப்போரூர் வட்டார வளர்ச்சி நிர்வாகம், நெம்மேலியில் சமுதாயக்கூடம், குடிநீர் கிணறு, சிறுவர் பூங்கா, கழிப்பறை, மயானம் ஆகியவற்றை, 4.91 ஏக்கர் அறக்கட்டளை இடத்தை ஆக்கிரமித்து அமைத்துள்ளது. பட்டிபுலத்தில் குடிநீர் கிணறு, பாதை உள்ளிட்டவை, 2.84 ஏக்கர் அறக்கட்டளை இடத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளன.சாலவான்குப்பத்தில் சாலை, மயானம் உள்ளிட்டவை, 1.58 ஏக்கர் அறக்கட்டளை நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு உள்ளன. மொத்த ஆக்கிரமிப்பு 13.6 ஏக்கர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை