உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருப்போரூர் - மாமல்லபுரம் இடையே இரவு நேர பேருந்து இல்லாமல் அவதி

திருப்போரூர் - மாமல்லபுரம் இடையே இரவு நேர பேருந்து இல்லாமல் அவதி

திருப்போரூர்:திருப்போரூர் - மாமல்லபுரம் இடையே இரவு 9:00 மணிக்கு மேல் பேருந்து வசதியில்லாமல் மாணவ - மாணவியர், தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் பல்வேறு கிராமங்களை இணைக்கும் முக்கிய பகுதியாக உள்ளது. திருப்போரூர் பேருந்து நிலையத்தில் இருந்து தாம்பரம், கிளாம்பாக்கம், தி.நகர், பிராட்வே என, பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல், மாமல்லபுரத்தில் இருந்து திருப்போரூர் வழியாக தாம்பரம், அடையாருக்கு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. திருப்போரூர் சுற்றியுள்ள கிராமப்புற மாணவர்கள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், மக்கள் என, அனைவரும், திருப்போரூர் வந்து பல்வேறு பகுதிகளுக்கு பிரிந்து செல்கின்றனர். மீண்டும் திருப்போரூர் வந்து அவரவர் பகுதிகளுக்கு செல்கின்றனர். இவ்வாறு இரவு 9:00 மணிக்கு பின் திருப்போரூரில் இருந்து மாமல்லபுரம் தடத்தில் வீடு திரும்பும் தொழிலாளர்கள், டியூஷன் முடித்து விட்டு திரும்பும் பள்ளி மாணவ - மாணவியர் பேருந்து வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர். மற்ற நேரங்களில் பேருந்து வசதி இருக்கிறது. இரவு 9:00 மணிக்கு பின் பேருந்து வசதி இல்லாததால், ஷேர் ஆட்டோவிலும், அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களிடமும், 'லிப்ட்' கேட்டு செல்கின்றனர். எனவே, திருப்போரூரில் இருந்து மாமல்லபுரம் தடத்தில் இரவு 9:00 மணிக்கு பின், பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என, மாணவ - மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !