செங்கல்பட்டு:ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில், தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட 31 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 337 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என, அடையாளம் காணப்பட்டு உள்ளன. ஓட்டுச்சாவடிகளில், சாய்வு தளங்கள் சீரமைப்பு உள்ளிட்ட முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் டி.ஆர்.பாலு, அ.தி.மு.க., வேட்பாளர் பிரேம்குமார், த.மா.கா., வேட்பாளர் வேணுகோபால், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பிரபாகரன் மற்றும் பதிவு பெற்ற 11 அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் 17 பேர் என, 31 பேர் போட்டியிடுகின்றனர்.இவர்களுக்கு, சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 31 வேட்பாளர்களுக்குமான அடையாள அட்டைகளை, நேற்று முன்தினம் தேர்தல் அலுவலர்கள் வழங்கினர்.கடந்த 2019 லோக்சபா தேர்தலில், 19 பேர் போட்டியிட்ட போது, ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் தலா இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.தற்போது, லோக்சபா தேர்தலில் 31 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் தலா இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.காஞ்சிபுரம் தொகுதியில் 11 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், ஒரு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மட்டும் பயன்படுத்தப்படுகிறது. கட்டுப்பாட்டு அறை
ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில், மதுரவாயல், அம்பத்துார், ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், பல்லாவரம், தாம்பரம் ஆகிய சட்டசபை தொகுதிகளில், தலைமை ஓட்டுப்பதிவு அலுவலர், ஓட்டுப்பதிவு அலுவலர் என, 15,000த்துக்கும் மேற்பட்டோர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.இத்தொகுதியில், 337 பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு, தேர்தல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட உள்ளது.காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில், 1,932 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றில், 178 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என, அடையாளம் காணப்பட்டு உள்ளன.பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், போலீசாருடன், கூடுதலாக மத்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.ஓட்டுச்சாவடி மையங்களில் குடிநீர், மின்சாரம், கழிப்பறை மற்றும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் செல்வதற்கு, சாய்வு தளங்கள் உள்ளிட்ட வசதிகளை, அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.இதில், சாய்வு தளங்கள் சீரமைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. இப்பணியும் விரைவில் முடிக்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.கடந்த தேர்தல்களில், பெண்களுக்கான பிங்க் ஓட்டுச்சாவடி, வாக்காளர்களை வெகுவாக கவர்ந்தது. வரும் லோக்பசா தேர்தலிலும், சட்டசபை தொகுதி வாரியாக மாடர்ன் ஓட்டுச்சாவடிகள் அமைக்க, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ முகாம்
இதைத்தொடர்ந்து, ஸ்ரீபெரும்புதுார் தொகுதியிலும் ஆறு சட்டசபை தொகுதிகளிலும், தலா இரண்டு மாடர்ன் ஓட்டுச்சாடிகள் தேர்ந்தெடுக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.வண்ணமயமான கம்பளம் விரித்து, பூச்செடிகள், பூத்தொட்டிகள், வாக்காளர் காத்திருப்பு வளாகம், அழகிய ஆடம்பரமான இருக்கை வசதிகள், வண்ணமயமான சுவர் பூச்சு, குடிநீர், மருத்துவ முகாம், வாக்காளர் பட்டியல், மின்விசிறி வசதிகளுடன் மாடர்ன் ஓட்டுச்சாவடி அமைய உள்ளது.தேர்தல் பணியில், முழு வீச்சில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டசபை தொகுதி பதற்றமான ஓட்டுச்சாவடி
மதுரவாயல் 52அம்பத்துார் 08ஆலந்துார் 20ஸ்ரீபெரும்புதுார் 83பல்லாவரம் 89தாம்பரம் 85மொத்தம் 337