உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிங்கபெருமாள் கோவிலில் 120 சவரன் கொள்ளை வழக்கில் இருவர் சிக்கினர்

சிங்கபெருமாள் கோவிலில் 120 சவரன் கொள்ளை வழக்கில் இருவர் சிக்கினர்

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவிலில், தி.மு.க., நிர்வாகி வீட்டில் கொள்ளையடித்த இருவரை, கடலுாரில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். சிங்கபெருமாள் கோவில், பாரதியார் தெருவைச் சேர்ந்த ஜெய கோபால் என்பவரது மனைவி யமுனா பாய்,63. இவருக்கு சதீஷ், ரத்தீஷ் என இரு மகன்கள் உள்ளனர். இருவரும், கே.ஆர்.சி., என்ற டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகின்றனர். இதில் ரத்தீஷ், அப்பகுதி தி.மு.க., ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராகவும் இருந்து வருகிறார். யமுனா பாய் பழைய வீட்டில் வசித்து வந்த நிலையில், மகன்கள் இருவரும் அதே வளாகத்தில் வீடு கட்டி, தங்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கடந்த 31ம் தேதி இரவு, யமுனா பாய் தான் வசிக்கும் வீட்டை பூட்டி விட்டு, மகன் சதீஷ் வீட்டிற்கு சென்று துாங்கினார். 1ம் தேதி காலை வந்து பார்த்த போது, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 120 சவரன் தங்க நகைகள், 1 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது. தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த, மறைமலை நகர் போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து புகாரின்படி, கூடுவாஞ்சேரி உதவி கமிஷனர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன் தலைமையில், நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. போலீசார், சம்பவம் நடந்த பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, இரண்டு நபர்கள் நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு, பேருந்தில் தப்பிச் செல்வது பதிவாகி இருந்தது. அந்த பேருந்து கடலுார் செல்லும் பேருந்து என தெரிந்த நிலையில், தனிப்படை போலீசார் கடலுார் சென்று விசாரித்தனர். இதில், கடலுார் மாவட்டம், நெல்லிகுப்பம் அடுத்த எய்தனுார் பகுதியைச் சேர்ந்த செந்தில்முருகன், 31, அவரது நண்பரான சென்னை நங்கநல்லுார் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார், 25, ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 119 சவரன் தங்க நகைகள் மற்றும் 40,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

24 மணி நேரத்தில் கைது

சிங்கபெருமாள் கோவில், ஜி.எஸ்.டி., சாலை, கிளாம்பாக்கம், திண்டிவனம், கடலுார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, கடலுார் பேருந்தில் தப்பிய கொள்ளையன் செந்தில் முருகன், சதீஷ்குமாரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். செந்தில்முருகன் மீது, பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில், 40க்கும் மேற்பட்ட திருட்டு, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிந்தது. இரண்டு கொள்ளையர்களையும், போலீசார் 24 மணி நேரத்தில் கைது செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ