உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இரு ஊராட்சி எல்லை பிரச்னை சாலை பணி தடுத்து நிறுத்தம்

இரு ஊராட்சி எல்லை பிரச்னை சாலை பணி தடுத்து நிறுத்தம்

புதுப்பட்டினம்:புதுப்பட்டினம், வாயலுார் உய்யாலிகுப்பம் ஆகிய மீனவ பகுதிகளின் எல்லை பிரச்னையால், கான்கிரீட் சாலைப் பணியை, உய்யாலிகுப்பம் மீனவர்கள் தடுத்து நிறுத்தினர்.கல்பாக்கம் அருகில், புதுப்பட்டினம் மற்றும் வாயலுார் ஊராட்சிக்குட்பட்ட உய்யாலிகுப்பம் மீனவ பகுதிகள், அருகருகே உள்ளன.இந்நிலையில், புதுப்பட்டினம் ஊராட்சி, சின்னம்மன் கோவில் பகுதியிலிருந்து, உய்யாலிகுப்பம் பழைய ஊத்துக்காட்டம்மன் கோவில் பகுதி வரை, புதுப்பட்டினம் ஒன்றியக்குழு நிதியில், கான்கிரீட் சாலை அமைக்க முடிவெடுக்கப்பட்டது.சாலையின் பெரும்பகுதி, புதுப்பட்டினம் மீனவ பகுதிக்கு உட்பட்டும், சுமார் 20 மீட்டர் நீள பகுதி உய்யாலிகுப்பம் பகுதிக்கு உட்பட்டும் உள்ளதாக கூறப்படுகிறது.உய்யாலிகுப்பத்திற்கு உட்பட்ட பகுதியில், அப்பகுதி மீனவர்கள், கோவில் வழிபாடு கருதி, பல ஆண்டுகளுக்கு முன், கான்கிரீட் தரைத்தளமும் அமைத்துள்ளனர்.உய்யாலிகுப்பம் பகுதிக்கு சொந்தமான இப்பகுதி, வருவாய்த்துறை ஆவணங்களில் புதுப்பட்டினம் பகுதிக்கு உரியதாக பதியப்பட்டுள்ளதாக தெரிகிறது.இந்நிலையில், புதுப்பட்டினம் பகுதிக்கு உட்பட்ட இடத்தில் சாலை அமைக்கப்பட்டு, உய்யாலிகுப்பம் பகுதிக்கும் சாலையை நீட்டிக்க முயன்ற நிலையில், அப்பகுதியினர் எதிர்த்ததால், சாலைப் பணி முடங்கியது. வருவாய்த் துறையினர் இரண்டு தரப்பினரிடமும் பேசியும், உய்யாலிகுப்பம் பகுதியினர் சாலை அமைக்க சம்மதிக்கவில்லை.அதையும் மீறி, நேற்று காலை சாலைப் பணிகளை துவக்க, ஜல்லிக்கற்கள் குவிக்கப்பட்டது. கான்கிரீட் கலவை இயந்திரம் கொண்டு வரப்பட்டது.எதிர்ப்பையும் மீறி சாலைப் பணிகளை துவக்குவதை கண்டு ஆத்திரமடைந்த உய்யாலிகுப்பம் மீனவர்கள், அப்பகுதியில் திரண்டு சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.இரு தரப்பினருக்கும் இடையே மோதல் அபாயம் ஏற்பட்டதால், கல்பாக்கம் போலீசார் முகாமிட்டு, ஜல்லிக்கற்களுடன் வந்த லாரியையும், கலவை இயந்திரத்தையும் திருப்பி அனுப்பினர். ஆவணங்களை முறைப்படுத்தி, இப்பகுதியினரிடையே மோதலை தவிர்க்க வேண்டும் என, இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி