பொது இடங்களில் நிறுத்தப்படும் டூ--- வீலர்கள் குறி வைத்து திருட்டு
மறைமலை நகர்:மறைமலை நகர் ரயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் வைக்கப்படும் இருசக்கர வாகனங்களை குறி வைத்து திருடும் சம்பவம் அதிகரித்துள்ளது.செங்கல்பட்டு, தாம்பரம், கிண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு போன்ற தேவைகளுக்காக தினமும் சென்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தங்களின் கிராமங்களில் இருந்து டூ- - வீலர்களில் மறைமலை நகர் ரயில் நிலையம் வந்து அருகில் உள்ள காலி இடங்களில் தங்களின் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இது போன்று நிறுத்தப்படும் வாகனங்களை குறி வைத்து வாகன திருட்டு நடைபெற்று வருகிறது.இது குறித்து மறைமலைநகர் போலீசார் கூறியதாவது:மறைமலை நகர் காவல் நிலைய எல்லைக்குள் மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில், காட்டாங்கொளத்துார், பொத்தேரி உள்ளிட்ட நான்கு ரயில் நிலையங்களை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் தங்களின் டூ- - வீலர்களை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தாமல் தண்டவாளங்களின் ஓரம், ஜி.எஸ்.டி., சாலை ஓரம், சாமியார் கேட் அருகில்,பேருந்து நிறுத்தம் என பாதுகாப்பு இல்லாத இடங்களில் நிறுத்தி செல்கின்றனர். இதை குறி வைத்து மர்ம நபர்கள் திருடிச் செல்கின்றனர்.ரயில் நிலைய 'பார்க்கிங்' பகுதியில் கட்டணம் செலுத்தி நிறுத்த தயங்கி வருகின்றனர்.இது போன்று நிறுத்தப்படும் வாகனங்களை காணவில்லை என, ஒரு நாளைக்கு இரண்டு நபர்கள் காவல் நிலையத்தில் வந்து புகார் அளிக்கின்றனர். இது போன்ற வாகனங்கள் திருட்டு,செயின் பறிப்பு போன்ற குற்ற செயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறன. எனவே பொது மக்களும் விழிப்புடன் போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.