பேரூர் குடிநீர் ஆலைக்கு கடலுக்கடியில் குழாய் பதிப்பு
மாமல்லபுரம்,:பேரூரில் அமைக்கப்படும், கடல்நீரில் குடிநீர் உற்பத்தி செய்யும் ஆலை பயன்பாட்டிற்காக, கடல்நீரை உள்ளே கொண்டுவரவும், உவர்நீரை வெளியேற்றவும், 3,000 மீட்டருக்கு, கடலின் கீழ் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. சென்னை குடிநீர், கழிவுநீரகற்று வாரியம் சார்பில், மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி ஊராட்சி, பேரூர் பகுதியில், நாள் ஒன்றுக்கு கடல்நீரில் இருந்து 40 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் ஆலை பணிகள், 6,078 கோடி ரூபாய் மதிப்பில் நடக்கின்றன. முதல்வர் ஸ்டாலின், 2023 ஆகஸ்டில் அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நகராட்சி நிர்வாக அமைச்சர் நேரு, இப்பணிகள் முன்னேற்றம் குறித்து, நேற்று ஆய்வு செய்தார். வாரிய மேலாண்மை இயக்குநர் வினய், செங்கல்பட்டு கலெக்டர் சினேகா உள்ளிட்டோர் உடனிருந்தனர். நீரேற்று நிலைய கட்டுமானம், உற்பத்தி நீர், சுத்திகரிப்பு நீர், தெளிந்த நீர், கசடு கெட்டிப்படுத்தல் உள்ளிட்டவற்றுக்கான தொட்டிகள், தொழிற்கூடங்கள் உள்ளிட்ட பணி நிலைகள் குறித்து, வாரிய அதிகாரிகள் விளக்கினர். ஆலை பயன்பாட்டிற்காக, கடல்நீரை உள்ளே கொண்டு வர, 250 செ.மீ., விட்டம் அளவில், 1,140 மீ., மற்றும் 1,150 மீ., ஆகிய நீள குழாய்கள், உவர்நீரை வெளியேற்ற, 756 மீ., நீள குழாய்கள், கடலின் கீழ் பகுதியில் பதிக்கப்பட்டுள்ளதாக, வாரிய நிர்வாகத்தினர் தெரிவித்தனர். சென்னை, தாம்பரம் ஆகிய மாநகராட்சி பகுதிகள், சென்னை சுற்றுப்புற 20 கிராமப் பகுதிகளின், 22.67 லட்சம் மக்களின் குடிநீர் தேவைக்காக, இந்த ஆலை அமைக்கப்படுகிறது.