உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஊரப்பாக்கத்தில் ஊரணீஸ்வரர் கோவில் இடம்...ஆக்கிரமிப்பு:1,300 ஆண்டு பழமையான கோவிலுக்கு நேர்ந்த அவலம்

ஊரப்பாக்கத்தில் ஊரணீஸ்வரர் கோவில் இடம்...ஆக்கிரமிப்பு:1,300 ஆண்டு பழமையான கோவிலுக்கு நேர்ந்த அவலம்

ஊரப்பாக்கம்:ஊரப்பாக்கத்தில், ஜி.எஸ்.டி., சாலையிலுள்ள ஊரணீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான, 6.5 ஏக்கர் இடம் பல ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இங்குள்ள, 400 சதுர அடி இடம் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதை மீட்டுத்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சியில், ஜி.எஸ்.டி., சாலையில் 1,300 ஆண்டுகள் பழமையான ஊரணீஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு பகுதிகளிலிருந்து இக்கோவிலுக்கு, அதிக அளவில் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.சோழர்கள் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்ட போது, தினசரி பூஜை உள்ளிட்ட செலவுகளுக்காக, 6.5 ஏக்கர் விவசாய நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.அந்த இடம், காலப்போக்கில் சிறிது சிறிதாக ஆக்கிரமிக்கப்பட்டு, தற்போது கோவில் மற்றும் சுற்று பிரகாரம் மட்டுமே உள்ளது.ஜி.எஸ்.டி., சாலை விரிவாக்கத்தின் போது, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், கோவிலின் முன்பகுதியும் அகற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, கோவிலை புனரமைக்கும் பணிகள் துவக்கப்பட்டன. ஆனால், போதிய நிதி வசதியின்றி, கடந்த 20 ஆண்டுகளாக புனரமைப்பு பணிகள் இழுபறியாக நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், கோவில் பின்புறம் உள்ள, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 400 சதுர அடி இடத்தை, தனியார் ஒருவர் ஆக்கிரமித்து, அதில் கடை ஒன்றைக் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார்.பல்வேறு வகையில் இந்த கோவிலின் இடம் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில், இந்த ஆக்கிரமிப்பை அகற்றித் தரும்படி, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.இதுகுறித்து, பக்தர்கள் கூறியதாவது:தொன்மை வாய்ந்த ஊரணீஸ்வரர் கோவிலில், கடந்த 20 ஆண்டிற்கும் மேலாக புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.தனியார் வசம் உள்ள இக்கோவில் நிர்வாகம், மூன்று குழுக்களிடம் உள்ளது. நிர்வாக போட்டியின் காரணமாக, இந்த கோவிலின் புனரமைப்பு பணிகள் வேகம் எடுக்கவில்லை. இதனால், 20 ஆண்டிற்கும் மேலாக, கும்பாபிஷேகம் நடத்த முடியாத சூழல் நிலவுகிறது. இந்நிலையில், ஊரணீஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள 400 சதுர அடி இடத்தை, அரசு அதிகாரிகள் துணையுடன், தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து, கடை ஒன்றை கட்டி, வாடகைக்கு விட்டு வருமானம் பார்த்து வருகிறார்.ஜி.எஸ்.டி., சாலையோரம் உள்ள, அந்த 400 சதுர அடி இடத்தின் தற்போதைய மதிப்பு 50 லட்சம் ரூபாய்க்கும் அதிகம்.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 400 சதுர அடி இடத்தை நிலத்தை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கோவில் புனரமைப்பு பணிகளை விரைந்து முடித்து, கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஊரப்பாக்கத்தின் அடையாளம்

பகுதிவாசிகள் கூறியதாவது:பல தலைமுறைகளாக இதே பகுதியில் வசித்து வருகிறோம். ஊரணீஸ்வரர் கோவில், ஊரப்பாக்கம் கிராமத்தின் அடையாளமாக உள்ளது.இக்கோவில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது என்றும், சோழர் காலத்தில் கட்டப்பட்டது எனவும் கூறப்படுகிறது. தல வரலாறு குறித்து பல முரண்கள் உள்ளன.கோவில் கட்டப்பட்ட போது, பல ஏக்கர் விவசாய நிலங்கள் கோவிலுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.தவிர, கடந்த 1,000 ஆண்டுகளில், கோவிலுக்காக பலர், தங்கள் சொத்துகளை தானம் வழங்கி உள்ளனர். அந்த சொத்துகள் குறித்தும், தற்போது யாரிடம் அந்த சொத்துகள் உள்ளன என்றும் அரசு ஆய்வு செய்து, மீட்க வேண்டும்.100 ஆண்டுகள் பழமையான கோவில்களை, ஹிந்து சமய அறநிலையத்துறை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, புனரமைப்பு பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நடத்தி வருகிறது.இதேபோல, பழமையான ஊரணீஸ்வரர் கோவில் புனரமைப்பு பணிகளையும் அறநிலையத்துறை மேற்கொண்டு, கும்பாபிஷேகம் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை