பிள்ளையார் குளத்தை சீரமைக்க வலியுறுத்தல்
கானாத்துார்: கானாத்துார் ஊராட்சியில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் உள்ள பிள்ளையார் குளம் பராமரிப்பு இல்லாமல் மோசமான நிலையில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் துார்வாரப்பட்டது. அதற்கு பின் துார்வாரப்படாமல் குளம் பராமரிப்பில்லாமல் உள்ளதாக கூறப்படுகிறது. அருகே உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் இக்குளத்தில் கலந்து வருகிறது. இதனால் குளத்து நீர் கடும் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் அதிகம் கலந்துள்ளதால், நோய் தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கும் வகையில், கானாத்துார் பிள்ளையார் குளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.