முகையூர் ஏரியை துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
கூவத்துார்:முகையூர் ஏரியை துார்வாரி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். கூவத்துார் அருகே முகையூர் கிராமத்தில் சர்வே எண் 188ல் 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த ஏரி வாயிலாக 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பெரும்பாலும் இப்பகுதியில் நெல் பயிரிடப்படுகின்றன. இப்பகுதியில் இரண்டு போகம் நெல் பயிரிடப்பட்டு வந்த நிலையில், ஏரி பல ஆண்டுகளாக துார்வாரி சீரமைக்கப்படாமல் உள்ளதால், மழைகாலத்தில் போதிய தண்ணீரை சேமிக்க முடியாத சூழல் ஏற்பட்டு, தற்போது ஒருபோகம் மட்டுமே பயிரிடப்படுகிறது. மேலும் சம்பா பருவத்தில் நெல் விவசாயம் செய்ய பருவ மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகையால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் , முகையூர் ஏரியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.