உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வண்டலுார் ஊராட்சி தலைவர் பதவிக்கு இடைத்தேர்தல் நடத்த வலியுறுத்தல்

வண்டலுார் ஊராட்சி தலைவர் பதவிக்கு இடைத்தேர்தல் நடத்த வலியுறுத்தல்

வண்டலுார்,வண்டலுார் ஊராட்சியில், காலியாக உள்ள ஊராட்சி தலைவர் பதவிக்கு இடைத் தேர்தல் நடத்த, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வண்டலுார் ஊராட்சி 899.90 ஹெக்டர் பரப்பில் அமைந்துள்ளது. இங்கு 232 தெருக்கள், 12 வார்டுகளில் 31280 நபர்கள் வசிக்கின்றனர்.கடந்த 2021ல் நடந்த ஒன்பது மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க.,வை சேர்ந்த முத்தமிழ்ச் செல்வி வெற்றி பெற்று, வண்டலுார் ஊராட்சி தலைவரானார்.இந்நிலையில், கடந்த 2024, பிப்., 29ல், தி.முக., பிரமுகர் ஆராமுதன் கொலை வழக்கில், முத்தமிழ்ச் செல்வி கைது செய்யப்பட்டு, சிறைக்கு சென்று, தற்போது ஜாமினில் உள்ளார். இதனால், அவரின் பதவி பறிக்கப்பட்டது.தொடர்ந்து, ஊராட்சி தலைவர் பதவிக்கு ஆறு மாத காலத்திற்குள் இடைத் தேர்தல் நடத்தப்படும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கடந்த 11 மாதங்களாக நடத்தப்படவில்லை.ஊராட்சி தலைவர் இல்லாததால், வண்டலுாரின் வளர்ச்சிப் பணிகள் முடங்கி உள்ளதாகவும், விரைவில் இடைத் தேர்தல் நடத்தவும் பொது மக்கள் கோரிக்கை எழுப்பி உள்ளனர்.பொது மக்கள் கூறியதாவது:மக்கள் பிரதிநிதி மரணமடைந்தாலோ, பதவி நீக்கம் செய்யப்பட்டாலோ, அடுத்த ஆறு மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். ஆனால், 11 மாதங்களாகியும் இங்கு இடைத் தேர்தல் நடக்கவில்லை.ஊராட்சி வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி ஆதாரங்களை மத்திய, மாநில அரசுகளிடமிருந்து பெற்றுத் தரக்கூடியவர் ஊராட்சி தலைவர்தான்.முக்கியமாக, எம்.எல்.ஏ., நிதி, எம்.பி., நிதி, ஒன்றியக் கவுன்சிலர் நிதி, மாவட்டக் கவுன்சிலர் நிதி உட்பட பல்வேறு நிதி ஆதாரங்களைத் திரட்டி, ஊராட்சி தலைவரால் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியும்.தற்போது, வண்டலுார் ஊராட்சிக்கு தலைவர் இல்லாததால், அரசு அதிகாரிகள் விருப்பப்படியே பணிகள் நடக்கின்றன. மக்களின் தேவையறிந்து, மக்கள் சார்பில் பணிகளை முன்னெடுக்க, மக்கள் பிரதிநிதி அவசியம். எனவே, வண்டலுார் ஊராட்சி தலைவர் பதவிக்கு இடைத்தேர்தல் நடத்திட அரசும், மாநில தேர்தல் ஆணையமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !