உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / உரிய நேரத்தில் பணிக்கு வராத வி.ஏ.ஓ.,- கண்டித்து ஊனமலையில் ஆர்ப்பாட்டம்

உரிய நேரத்தில் பணிக்கு வராத வி.ஏ.ஓ.,- கண்டித்து ஊனமலையில் ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊனமலை ஊராட்சியில், 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், விவசாயமே பிரதான தொழில்.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில், கிராம நிர்வாக அலுவலர் கட்டடம் அமைந்துள்ளது. இங்கு, கிராம நிர்வாக அலுவலராக, காந்திமதி என்பவர் பணியாற்றி வருகிறார்.அவர், உரிய நேரத்தில் பணிக்கு வருவதில்லை எனவும், விவசாயிகளிடம் அலட்சியமாக பதில் அளிப்பதாகவும், அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.நேற்று, 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பணியாளருக்கு, வேறு இடத்திற்கு பணி மாறுதல் அளிக்க வேண்டும் எனக் கூறி, அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மேல்மருவத்துார் போலீசார் மற்றும் பெரும்பாக்கம் பிர்கா வருவாய் ஆய்வாளர் சிவக்குமார், ஆர்ப்பாட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.இது குறித்து, உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்த பின், மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்ட அனைத்து பயிர் சாகுபடி விவசாயிகள் கூட்டமைப்பின் துணைத் தலைவர் ரவிச்சந்திரன், 55, கூறியதாவது:கிராம நிர்வாக அலுவலராக காந்திமதி என்பவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணியாற்றுகிறார். உதவியாளராக பூர்ணிமா என்பவர் பணியில் உள்ளார்.கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும், உரிய நேரத்தில் பணிக்கு வருவதில்லை. அவர்களிடம், சிட்டா, பட்டா அடங்கல் போன்ற நகல்களை கேட்டால், உரிய பதில் அளிப்பதில்லை.விவசாயிகளிடம் அலட்சியமாக பதில் அளிக்கிறார். விவசாயிகளை ஒருமையில் பேசுகிறார். வி.ஏ.ஓ., பணிக்கு வந்து ஒன்றரை ஆண்டு காலத்தில், ஒருமுறை கூட கிராம சபை கூட்டத்தில் பங்கேற்கவில்லை.எனவே, வேறு கிராமத்திற்கு பணியிட மாறுதல் அளிக்கக்கோரி, வருவாய் கோட்டாட்சியரை சந்தித்து, கிராம மக்கள் மனு அளிக்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ