சாலை நடுவே வி.சி., பொதுக்கூட்ட மேடை மறைமலை நகரில் வாகன ஓட்டிகள் தவிப்பு
மறைமலைநகர்:விடுதலை சிறுத்தை கட்சி பொதுக்கூட்டத்திற்காக, பாவேந்தர் சாலையை சுற்றிலும் ஆக்கிரமித்து மேடை அமைத்ததால், மறைமலைநகரில் வாகன ஓட்டிகள் திணறினர்.மறைமலைநகர் பாவேந்தர் சாலை, போக்குரவத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலை. வர்த்தகம் நிறைந்த பகுதி என்பதால், 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் இந்த பகுதிக்கு வந்து செல்கின்றனர்.இந்த சாலையில், வி.சி., கட்சி சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. கட்சியின் பொதுச் செயலர் திருமாவளவன் பங்கேற்றார். இதற்காக, சாலையை சுற்றிலும் மறைத்து, பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு இருந்தது. இதனால், வாகன ஓட்டிகள் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டனர்.பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்கள் பொதுக்கூட்டம் நடந்த, இதே பகுதியில் சாலையை ஆக்கிரமிப்பதால், வாகன ஓட்டிகளுக்கும் பெரும் தொல்லையாகி விடுகிறது. இதற்கு தீர்வு காண வேண்டுமென வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:மறைமலைநகரில் அரசியல் கூட்டங்கள் நடத்த வசதியாக நகராட்சி மைதானம் உள்ளது. இருப்பினும், அனைத்து அரசியல் கட்சியினரும், போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த பாவேந்தர் சாலையை மறித்து கூட்டம் நடத்துகின்றனர்.பொது கூட்டம் நடக்கும் பகுதியில், பல மணி நேரங்களுக்கு முன், இந்த சாலையில் தடுப்பு அமைத்து, போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. வி.சி., பொதுக்கூட்டத்திற்காக நேற்று அதிகாலை முதல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. வார இறுதி நாள் என்பதால் சுற்றியுள்ள கிராம மக்கள் கடைகளுக்கு வந்து செல்வோர் அவதிப்பட்டனர்.அதேபோல, பொதுக்கூட்டம் நடைபெறும் தினங்களில், இந்த பகுதியில் உள்ள கடைகளின் வியாபாரமும் பெருமளவு பாதிக்கப்படுகிறது.எனவே, மறைமலைநகரில் பொதுக்கூட்டம் நடத்தும் அரசியல் கட்சிகளுக்கு, நகராட்சி மைதானத்தில் மட்டுமே அனுமதி தரவேண்டும். சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக, பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.