இழப்பீடு தராத கட்டுமான நிறுவனத்துக்கு வாரன்ட்
சென்னை: ஒப்பந்தப்படி வீடு ஒப்படைக்காத வழக்கில், இழப்பீடு தராத தனியார் கட்டுமான நிறுவனம் மீது, 'வாரன்ட்' பிறப்பித்து நடவடிக்கை எடுக்க ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பழைய மாமல்லபுரம் சாலை, தையூர் பகுதியில், 'அலையன்ஸ் வில்லா' நிறுவனம் சார்பில், கடந்த 2008ல் 'அலையன்ஸ் ஜாஸ்மின் ஸ்பிரிங்ஸ்' என்ற பெயரில், குடியிருப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. இதில் வீடு வாங்குவதற்காக, மானுஷா தேவி என்பவர் ஒப்பந்தம் செய்தார். இதற்கான ஒப்பந்தத்தில் குறித்த காலத்தில், அந்நிறுவனம் வீட்டை ஒப்படைக்கவில்லை. இது தொடர்பாக, மானுஷா தேவி, ரியல் எஸ்டேட் ஆணையத்தில், 2022ல் புகார் செய்தார். இதை விசாரித்த ரியல் எஸ்டேட் ஆணையம், மனுதாரருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை அந்த கட்டுமான நிறுவனம் செயல்படுத்தவில்லை. இதையடுத்து, மானுஷா தேவி, ரியல் எஸ்டேட் ஆணையத்தில் மீண்டும் முறையிட்டார். இது தொடர்பாக, ஆணைய விசாரணை அலுவலர் உமா மகேஸ்வரி பிறப்பித்த உத்தரவு: ஆணைய உத்தரவை செயல்படுத்த, கட்டுமான நிறுவனம் தவறியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. எனவே, வருவாய் மீட்பு சட்டப்படி, அந்த நிறுவனத்துக்கு எதிராக வாரன்ட் பிறப்பித்து, இழப்பீட்டு தொகையை வசூலிக்க, செங்கல்பட்டு கலெக்டர் நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.