உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சென்னையின் குடிநீர் தேவைக்கு புதிய நீர்த்தேக்கம் ஒப்பந்ததாரர் தேர்வை துவக்கியது நீர்வளத்துறை

சென்னையின் குடிநீர் தேவைக்கு புதிய நீர்த்தேக்கம் ஒப்பந்ததாரர் தேர்வை துவக்கியது நீர்வளத்துறை

மாமல்லபுரம்: சென்னையின் குடிநீர் தேவைக்காக கிழக்கு கடற்கரை சாலை அருகே புதிய நீர்தேக்கம் அமைப்பதற்கான ஒப்பந்ததாரர் தேர்வை நீர்வளத்துறை துவங்கிஉள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை ஏரிகள் மற்றும் கடலுார் மாவட்டம் வீராணம் ஏரி நீரும், சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. மீஞ்சூர், சூலேரிக்காடு ஆகிய இடங்களில் செயல்படுத்தப்படும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டமும் கை கொடுத்து வருகிறது. மாமல்லபுரம் பேரூரில் புதிய கடல்நீரை குடிநீராக்கும் திட்ட பணி நடந்து வருகிறது. இருப்பினும், இவற்றை வைத்து வருங்கால குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கிழக்கு கடற்கரை சாலை அருகே, கோவளம் வடிநில பகுதியில், நீர்வளத்துறை வாயிலாக புதிய நீர்தேக்கம் அமைக்கப்படும் என, இந்தாண்டு பட்ஜெட்டில், தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, கோவளம், திருவிடந்தை, நெம்மேலி, பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள திருப்போரூர், காலவாக்கம், தையூர், கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கும் இடையே, பகிங்ஹாம் கால்வாயை ஒட்டி, 1.60 டி.எம்.சி., கொள்ளளவு நீர்தேக்கம் உருவாக்கப்பட உள்ளது. திருப்போரூர் அருகில் உள்ள, தமிழக அரசின் உப்பு நிறுவனத்தின், 5,000 ஏக்கர் நிலம் இப்பணிக்கு பயன்படுத்தப்பட உள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில், திருப்போரூர், சிறுதாவூர், மானாமதி, கேளம்பாக்கம், தையூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள 60க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி, உபரிநீராக ஆண்டு தோறும், 2.97 டி.எம்.சி., நீர், பகிங்ஹாம் கால்வாய் வாயிலாக கடலில் கலந்து வீணாகிறது. இந்த நீரை, சென்னையின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தும் வகையில், புதிய நீர்தேக்கம் அமையவுள்ளது. சென்னை மண்டல நீர்வளத்துறைக்கு உட்பட்ட பாலாறு வடிநில கோட்டம் வாயிலாக, இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்ததாரர் தேர்வு தற்போது துவங்கியுள்ளது. இதுகுறித்து, சென்னை மண்டல நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய நீர்தேக்க பணிகள் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்படி, தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில், 164.61 கோடி ரூபாய் மதிப்பிலும், வடக்கு - மேற்கு பகுதியில், 161.66 கோடி ரூபாய் மதிப்பிலும் பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்ததாரர் தேர்வு, வரும் 25ம் தேதி பாலாறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் நடக்க உள்ளது. இப்பணிக்கு, மத்திய சுற்றுச்சூழல்துறை அனுமதி பெறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. விரைவில் அனுமதி கிடைக்கும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை