உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சித்தனக்காவூரில் ஏரி மதகு உடைப்பை தடுக்க மண் மூட்டைகளை அடுக்கும் நீர்வளத்துறையினர்

சித்தனக்காவூரில் ஏரி மதகு உடைப்பை தடுக்க மண் மூட்டைகளை அடுக்கும் நீர்வளத்துறையினர்

உத்திரமேரூர்: சித்தனக்காவூரில், ஏரி மதகு உடைப்பை தடுக்க, நீர்வளத் துறையினர் மண் மூட்டைகளை அடுக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர். உத்திரமேரூர் தாலுகா, சித்தனக்காவூரில் 250 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலான இந்த ஏரியில் நான்கு மதகுகள், இரண்டு கலங்கல்கள் உள்ளன. பருவமழை நேரங்களில் ஏரி முழுதுமாக நிரம்பும்போது, அப்பகுதியில் 350 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், 40 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட மதகுகள், முறையாக பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து உள்ளன. தற்போது, பருவமழையால் ஏரி நிரம்பி வரும் நிலையில், சேதமடைந்த மதகுகளின் வழியே தண்ணீர் வீணாக வெளியேறி வந்தது. மேலும், முழுதுமாக ஏரி நிரம்பும்போது , சேதமடைந்த மதகு உடையும் அபாயமும் உள்ளது. எனவே, சேதமடைந்த மதகுகளை சீரமைக்க, அப்பகுதி விவசாயிகள் பேரிடர் மேலாண்மை துறையினருக்கு கோரிக்கை மனு அளித்தனர். அதன்படி, உத்திரமேரூர் நீர்வளத்துறையினர் சேதமடைந்துள்ள 2 மற்றும் 4வது மதகு பகுதிகளில், தண்ணீர் வெளியேறுவதை தடுக்க, தலா, 200 மண் மூட்டைகளை கொண்டு அடுக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர். இதுகுறித்து, நீர்வளத்துறை உதவி பொறியாளர் கண்ணன் கூறியதாவது: சித்தனக்காவூர் ஏரியில் உள்ள நான்கு மதகுகளில், இரண்டு மதகுகள் சேதமடைந்து உள்ளன. இதனால், மதகு பகுதியில் இருந்து வெளியேறும் தண்ணீரை தடுக்க, தற்காலிகமாக மண் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளன. ஏரியில் தண்ணீர் வறட்சி ஏற்படும்போது, 2 மற்றும் 4வது மதகுகள் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி