ரூ.466 கோடியில் இரு தடுப்பணை திட்டங்கள் என்ன செய்றாங்க? ஐந்து ஆண்டுகளாக துாசி தட்டாமல் முடக்கம்
மாமல்லபுரம்: பருவ மழைக்காலங்களில், கடலில் பெருமளவில் வீணாகும் மழைநீரை சேமிக்கும் வகையில், பாலாற்றின் குறுக்கே இரண்டு இடங்களில், 466 கோடி ரூபாயில் தடுப்பணைகள் கட்டும் திட்டத்தை அறிவித்த தமிழக அரசு, அதற்கான எந்த பணிகளையும் முன்னெடுக்காமல், ஐந்து ஆண்டுகளாக, 'பைல்'களை அப்படியே முடக்கி வைத்துள்ளதால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். பணிகளை விரைந்த துவக்க வேண்டுமெனவும், அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில், குடிநீர், விவசாயம் ஆகியவற்றுக்கான முக்கிய நீராதாரமாக பாலாறு உள்ளது. கர்நாடக மாநிலத்தில் தோன்றும் ஆறு, தமிழகம் வழியே கடந்து, செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த, வாயலுார் - கடலுார் இடையே வங்க கடலில் கலக்கிறது. மணல் குவாரிகளாலும், மணல் திருட்டாலும் ஆறு, அதலபாதாள சுரங்கமாக மாறி பாழானது. கடல்நீரும் ஊடுருவியது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து உவர்ப்புத்தன்மை அதிகரித்தது. நீராதார பாதிப்பை தவிர்க்க, குறிப்பிட்ட இடைவெளிகளில் தடுப்பணைகள் கட்டுமாறு, ஆற்றுப்படுகை பகுதியினர் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் அரசு கண்டுகொள்ளவில்லை. கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய பகுதியின் குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்கு, பாலாற்று நீர் வழங்கப்படும் நிலையில், குடிநீர் தேவை அதிகரித்து வருகிறது. இதையடுத்து, அணுசக்தி துறையே, 32.50 கோடி ரூபாய் வழங்கி, வாயலுார் - கடலுார் முகத்துவார பகுதியில், 1 டி.எம்.சி., கொள்ளளவு நீர்செறிவூட்டல் தடுப்பணையை, 2019ல் கட்டியது. பொதுப்பணித்துறையும், மற்றொரு தடுப்பணையை, 30 கோடி ரூபாய் மதிப்பில், அதே ஆண்டில், 1 டி.எம்.சி., கொள்ளளவில், வல்லிபுரம் - ஈசூர் பகுதியில் கட்டியது. தடுப்பணை பகுதிகளில், ஏழு ஆண்டுகளாக நீர் தேங்கி, அப்பகுதியினர் பயனடைகின்றனர். வடகிழக்கு பருவமழை காலத்தில், வெள்ளம் பெருக்கெடுக்கும் நிலையில், கடலிலும் கலந்து வீணாகிறது. முகத்துவார தடுப்பணையில், முதல் ஆண்டில் 7 டி.எம்.சி.,யும், அடுத்த ஆண்டு 8.5 டி.எம்.சி.,யும் கடலில் கலந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் கடலில் வீணாகும் நீரின் அளவு பல மடங்கு அதிகரித்தது. அவ்வாறு வீணாவதை தவிர்க்க, கல்பாக்கம் அடுத்த நல்லாத்துாரில், 56.50 கோடி ரூபாய் மதிப்பில், மற்றொரு தடுப்பணை அமைக்க, பொதுப்பணித்துறை கடந்த 2020ல் முடிவெடுத்தது. அடுத்த ஆண்டில், செங்கல்பட்டு அடுத்த உதயம்பாக்கத்தில், 270 கோடி ரூபாய் மதிப்பில், மேலும் ஒரு தடுப்பணை அமைக்கவும் முடிவானது. உதயம்பாக்கம் பகுதி ஆற்றில், கதவணையுடன் கூடிய தடுப்பணை மேல், உதயம்பாக்கம் - படாளம் இடையே உயர்மட்ட பாலமும் அமைக்க முடிவானது. இதற்கு, கடந்த ஆண்டு திட்ட மதிப்பீடு, 410 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. மொத்தம், 466 கோடி ரூபாயிலான இரண்டு திட்டங்களுமே, தற்போது வரை செயல்படுத்தப்படாமல் கிடப்பில் உள்ளன. செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும், பாலாற்றில் வெள்ளம் பாய்கிறது. இரண்டு தடுப்பணைகளே உள்ளதால், 2 டி.எம்.சி., தண்ணீர் தான் தேக்கப்படுகிறது. பெரும்பாலும் கடலில் கலந்து வீணாகிறது. இரண்டு தடுப்பணைகளும், முந்தைய ஆட்சியில் தான் கட்டப்பட்டன. தற்போதைய ஆட்சியில், ஒரு தடுப்பணையும் கட்டாமல் புறக்கணித்து, விவசாயிகள் ஏமாற்றத்தில் உள்ளனர். முன்பு திட்டமிட்ட நல்லாத்துார், உதயம்பாக்கம், பழவேலி ஆகிய இடங்களிலும், தடுப்பணைகள் கட்ட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். ---- அரசு தாங்க முடிவு செய்யணும்! நல்லாத்துாரில் தடுப்பணை கட்ட, தற்போது 85 கோடி ரூபாயில் திட்ட மதிப்பீடு தயாரித்து, புதிய வடிவமைப்பிற்கு ஒப்புதல் பெற முயன்று வருகிறோம். உதயம்பாக்கம் தடுப்பணை திட்டத்திற்கும், 445 கோடி ரூபாய் மதிப்பிட்டு, அரசின் ஒப்புதலை எதிர்பார்த்துள்ளோம். அரசு தான் முடிவெடுக்க வேண்டும். - பொதுப்பணித்துறையினர், கீழ்பாலாறு வடிநில கோட்டம்