உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கூடுவாஞ்சேரி அணுகு சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றுவது எப்போது?

கூடுவாஞ்சேரி அணுகு சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றுவது எப்போது?

கூடுவாஞ்சேரி, :ஜி.எஸ்.டி., சாலையில் வண்டலுார் முதல் சீனிவாசபுரம் வரை உள்ள அணுகு சாலையில், இரு மார்க்கத்திலும் ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.அதோடு, நடைபாதை வியாபாரிகளும் பெருமளவு சாலையை ஆக்கிரமித்து, வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில், கடுமையான வாகன நெரிசல் ஏற்படுகிறது.அதனால், வாகன ஓட்டிகள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்து வந்தனர்.இந்நிலையில், கடந்த மாதம் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி, கூடுவாஞ்சேரி - சீனிவாசபுரம் இடையிலான அணுகு சாலையில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில், நெடுஞ்சாலை துறையினர், வருவாய் துறையினர் இணைந்து ஈடுபட்டனர்.ஆனால், ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், கால அவகாசம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களுடன், நகராட்சி தலைவர் கார்த்திக், வண்டலுார் தாசில்தார் புஷ்பலதா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து, ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.கிளாம்பாக்கம் பேருந்து முனையம் பயன்பாட்டிற்கு வந்ததில் இருந்து, ஜி.எஸ்.டி., சாலையில் போக்குவரத்து மேலும் அதிகரித்துள்ளது. மேலும், வார விடுமுறை நாட்களில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால், வாகன நெரிசல் அதிகரித்துள்ளது.வாகன நெரிசலுக்கு, சாலையோரம் இருபுறமும் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கடைகளும் முக்கிய காரணமாக உள்ளது. எனவே, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து, செங்கல்பட்டு வரை, சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ