செங்கை - காஞ்சிபுரம் சாலை பணி செப்டம்பருக்குள் முடியுமா?
செங்கல்பட்டு:செங்கல்பட்டு - காஞ்சிபுரம் வரை சாலை அமைக்கும் பணி, 75 சதவீதம் நிறைவு பெற்றுள்ள நிலையில், செப்டம்பருக்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஆனால், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் மாநில நெடுஞ்சாலை போக்குவரத்திற்கேற்ப அகலம் இல்லாமல், குறுகியதாக உள்ளது. பாலங்களும் சிறிய அளவிலேயே உள்ளன. சாலையை விரிவாக்கம் செய்து, மேம்படுத்த வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கை மனுக்கள் சென்றன. இதையடுத்து, சென்னை - கன்னியாகுமரி தடத்தில், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையை மேம்படுத்த, 2022ம் ஆண்டு 448 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கீடு செய்தது. அதன் பின், செங்கல்பட்டில் இருந்து வாலாஜாபாத் அடுத்த வெண்குடி கிராமம் வரை, 22 கி.மீ., தொலைவிற்கு நான்கு வழிச்சாலை, வெண்குடி முதல் காஞ்சிபுரம் வரை, 13 கி.மீ., இருவழி சாலை அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன. செங்கல்பட்டு, பழைய சீவரம், உள்ளாவூர், புளியம்பாக்கம், கிதிரிப்பேட்டை, ஊத்துக்கோட்டை ஆகிய இடங்களில், பாலம் கட்டுமான பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. இதில், புளியம்பாக்கம், கிதிரிப்பேட்டை ஆகிய மேம்பால பகுதியில், ரயில்வே மின்கம்பிகள் செல்கின்றன. இவற்றை மாற்ற, ரயில்வே நிர்வாகத்திடம், நெடுஞ்சாலைத்துறை அனுமதி பெற்று, பணிகள் நடை பெற்று வருகின்றன. செங்கல்பட்டு - வாலாஜாபாத் வரை, கிராமங்கள் இடையில் சாலை குறுக்கிடும் பகுதிகளில், மின் விளக்கு அமைக்கும் பணிகளும் நிறைவு பெற்றுள்ளன. செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலை வரை, 40 இடங்களில் பயணியர் நிழற்குடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தற்போது, செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பகுதியில், சாலைப் பணிகள் 70 சதவீதம் முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இச்சாலையில், சாலை விபத்து மற்றும் சமூக விரோத செயல்களை தடுக்க, நவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட உள்ளன. எனவே, சாலை மற்றும் பாலப் பணிகளை விரைவாக முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து வலியுறுத்தி வருகின்றனர். செங்கல்பட்டு - காஞ்சிபுரம் வரை, சாலைப் பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ளன. புளியம்பாக்கம், கிதிரிப்பேட்டை மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் முடிந்து, வரும் செப்டம்பர் மாதம், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். - நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், காஞ்சிபுரம் மாவட்டம்.