ஊராட்சி அலுவலக கட்டடம் திம்மாபுரத்தில் அமையுமா?
அச்சிறுபாக்கம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்டது, திம்மாபுரம் ஊராட்சி . இங்கு, 1,500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன், பிள்ளையார் கோவில் தெரு பகுதியில், ஊராட்சி அலுவலக கட்டடம் கட்டப்பட்டது.கடந்த 10 ஆண்டுகளாக கட்டடம் பயன்பாடின்றி, பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், 10 ஆண்டுகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி தலைவர்கள், தற்காலிகமாக மாற்று கட்டடத்தில் ஊராட்சி அலுவலகத்தை அமைத்து செயல்படுத்தி வருகின்றனர்.இதனால், ஊராட்சி நகல்கள் மற்றும் ஆவணங்கள், பதிவேடுகள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பது, பெரும் சிரமமாக இருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர்.பழைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி, அதே பகுதியில் புதிதாக ஊராட்சி அலுவலக கட்டடம் அமைத்து தரக்கோரி, திம்மாபுரம் ஊராட்சி தலைவர் கங்காதுரை, கலெக்டர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளார்.ஆனால், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. மாற்றுக் கட்டடத்தில் ஊராட்சி அலுவலகம் செயல்பட்டு வருவதால், ஊராட்சி ஆவணங்களை பாதுகாப்பதில் சிரமமாக உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, திம்மாபுரத்தில் ஊராட்சி அலுவலக கட்டடம் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.