இடைக்கழிநாடு பேரூராட்சியில் மழைநீர் கால்வாய் சீரமைக்கப்படுமா?
செய்யூர், இடைக்கழிநாடு பேரூராட்சியில், தாழ்வான பகுதிகளில் உள்ள மழைநீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். செய்யூர் அருகே உள்ள இடைக்கழிநாடு பேரூராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. இங்கு, 35,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இடைக்கழிநாடு பேரூராட்சி பகுதியில், கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வரும் நிலையில், பல இடங்களில் குடியிருப்பு பகுதியை விட அதிக உயரத்தில், சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்தாண்டு ஓதியூர், பனையூர், நயினார்குப்பம், முதலியார்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வெளியேற வழியின்றி, குடியிருப்பு பகுதிகளில் தேங்கியதால், மக்கள் அவதிப்பட்டனர். மேலும், பல இடங்களில் மழைநீர் வெளியேற, சாலை நடுவே பள்ளம் தோண்டியதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. எனவே இந்தாண்டு, பேருராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, தாழ்வான பகுதியில் உள்ள மழைநீர் கால்வாய் மற்றும் நீர் வழித்தடங்களை சீரமைக்க வேண்டும். மழைநீரால் சாலை துண்டிக்க வாய்ப்புள்ள இடங்களில், தற்காலிக பாலங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.