எலும்பு கூடாக காட்சியளிக்கும் மின் கம்பம் சீரமைக்கப்படுமா?
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்டு, பள்ளிப்பேட்டை ஊராட்சி உள்ளது. 2வது வார்டு, சந்திகோவில் தெருவில், 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.இங்கு, அச்சிறுபாக்கம் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சந்தி கோவில் தெருவில் உள்ள மின் கம்பத்தில் இருந்து, வீட்டு மின் இணைப்புகள் மற்றும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.இங்கு உள்ள இரண்டு மின் கம்பங்களில், சிமென்ட் பூச்சு உதிர்ந்து, துருப்பிடித்த இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. மின் கம்பம் மிகவும் சேதமாக உள்ளதால், இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.மின் கம்பங்களை மாற்றுவதற்காக, புதிதாக மின் கம்பங்கள் கொண்டுவரப்பட்டு, மாற்றி அமைக்காமல், அப்படியே கிடப்பில் போட்டு வைத்துள்ளனர்.எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன், பழைய மின் கம்பங்களை அகற்றி, புதிய மின் கம்பங்களை நட்டு, மின் இணைப்புகள் ஏற்படுத்த, மின்வாரியத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.