வேடந்தாங்கலில் புதிதாக சமுதாய நலக்கூடம் அமையுமா?
மதுராந்தகம் வேடந்தாங்கல் ஊராட்சியில் உள்ள சமுதாய நலக்கூடம் சேதமடைந்துள்ளதால், இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டுமென, கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அச்சிறுபாக்கம் ஒன்றியம், வேடந்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்டு சித்தாத்துார், துறையூர், விநாயகநல்லுார் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில், 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் தங்களின், இல்ல சுப நிகழ்ச்சிகளை மதுராந்தகம், கருங்குழி, படாளம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் நடத்தி வருகின்றனர். இதனால், பொருளாதார சிக்கலும், வீண் அலைச்சலும் ஏற்படுகிறது. வேடந்தாங்கல் ஊராட்சியில், 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த சமுதாய நலக்கூடம், தற்போது விரிசல் அடைந்து, பயன்பாடின்றி உள்ளது. இந்த சமுதாய நலக்கூடத்தை இடித்து அப்புறப்படுத்தி, அதே இடத்தில் கட்டினால், இப்பகுதி மக்கள் பயனடைவர். மேலும், இந்த சமுதாய நலக்கூடத்தில் உணவு பரிமாறும் இடம், சமையல் தயாரிப்புக்கூடம் என அனைத்து வசதிகளுடன் இருக்கும்படி அமைக்க, கலெக்டர் மற்றும் அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.