செங்கல்பட்டு -- திருப்போரூர் வரை பயணியர் நிழற்குடை அமையுமா?
செங்கல்பட்டு:செங்கல்பட்டு -- திருப்போரூர் வரை நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சாலை, இருவழி பாதையாக இருந்தது. இச்சாலையில், வாகன போக்குவரத்து அதிகரித்ததால், சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, நெடுஞ்சாலைத் துறை மற்றும் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வந்து கொண்டிருந்தது.அதன்பின், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, நான்கு வழிச்சாலையாக மாற்றம் செய்வதற்கு, அரசுக்கு கருத்துரு அனுப்பியது. இதையடுத்து, மூன்று ஆண்டுகளுக்கு முன் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது.அப்போது, சாலையின் இருபுறமும் உள்ள பேருந்து நிறுத்தங்களில் அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை அகற்றப்பட்டன.திருவடிசூலம், சென்னேரி, முள்ளிப்பாக்கம், கரும்பாக்கம், கொட்டமேடு, உள்ளிட்ட 22 இடங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்களில், நிழற்குடை இல்லாததால், வெயில், மழையில் நனைந்து பயணியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.அதுமட்டுமல்லாமல், அரசு பேருந்துகளில் புதிதாக வரும் ஓட்டுனர்கள், பேருந்து நிறுத்தங்கள் தெரியாமல் நிறுத்துகின்றனர். இதை தவிர்க்க பேருந்து நிறுத்தங்களில், பயணியர் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து மனு அளிக்கப்பட்டது.இதை தொடர்ந்து, பயணியர் நிழற்குடை அமைக்கும் இடங்களை ஆய்வு செய்து அறிக்கை தர, போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.