உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருப்போரூர் பஸ் நிலையத்தில் பயண சீட்டு மையம் வருமா?

திருப்போரூர் பஸ் நிலையத்தில் பயண சீட்டு மையம் வருமா?

திருப்போரூர்:திருப்போரூர் பேருந்து நிலையத்தில், மாநகர போக்குவரத்து கழகத்தின் பயணச் சீட்டு வழங்கும் மையம் ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்க எல்லைகள், 2007ம் ஆண்டு, 35 கி.மீ.,லிருந்து, 50 கி.மீ.,க்கு விரிவாக்கம் செய்யப்பட்டன.இதன் காரணமாக திருப்போரூர், மாமல்லபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.திருப்போரூர் தடத்தில் ஆரம்பத்தில் 25 பேருந்துகள் இயக்கப்பட்டதில், தற்போது 100க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.மேலும், இங்குள்ள பேருந்து நிலையத்தில் இடவசதி, கூரை, குடிநீர் என, அனைத்து வசதிகளுடன் கூடிய நேர காப்பாளர் அலுவலகமும் உள்ளது. கேளம்பாக்கம் மற்றும் சிறுசேரி பூங்கா பேருந்து நிலையத்திற்கும், 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.திருப்போரூர் சுற்று வட்டார கிராம பொதுமக்கள், மாணவர்கள் என அனைவரும் துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார், சிறுசேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்குச் செல்கின்றனர்.இவர்கள், மாதாந்திர பயணச்சீட்டு வாங்க திருவான்மியூர், அடையாறு, தாம்பரம் பகுதிகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. அங்கு கூட்ட நெரிசல், வீண் அலைச்சல், காலவிரயம் போன்ற சிரமங்களை சந்திக்கின்றனர்.எனவே, திருப்போரூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களின் நலன் கருதி, திருப்போரூர் பேருந்து நிலையத்தில், பயணச்சீட்டு மையம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை