பரனுார் சுங்கச்சாவடியில் புறக்காவல் நிலையம் அமையுமா?
செங்கல்பட்டு:பரனுார் சுங்கச்சாவடி பகுதியில், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை தவிர்க்க, புறக்காவல் நிலை யம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு அடுத்த பரனுாரில், தேசிய நெடுஞ்சாலை ஆணைய சுங்கச் சாவடி உள்ளது. இவ்வழியாக, சென்னை யிலிருந்து தென்மாவட்டங்களுக்கும், தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. விழாக் காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில், வாகன போக்குவரத்து அதிகரித்து நெரிசல் ஏற்படுகிறது. இங்கு, சாலை பயன்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சமூக விரோதிகள், வன்முறையாளர்கள் இவ்வழியில் செல்லும் போது, கட்டணம் கொடுக்க மறுப்பதால், தகராறு ஏற்படுகிறது. இதுமட்டுமின்றி அப்பகுதியில், வெளியூர் செல்ல காத்திருக்கும் பயணியரிடமும் நகை பறிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. மேலும், இளம்பெண்களிடம் பாலியல் ரீதியாக மர்ம நபர்கள் தொந்தரவு செய்வதும் அதிகரித்து வருகிறது. இச்சம்பவங்களை தவிர்க்க, நிரந்தரமாக பரனுார் சுங்கச்சாவடி பகுதியில் புறக்காவல் நிலையம் அமைத்து, சப் -- இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசாரை நியமிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.