உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  வாகன நுழைவு கட்டணம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுமா?

 வாகன நுழைவு கட்டணம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுமா?

மாமல்லபுரம்: மாமல்லபுரம் சாலைகளில் ஏற்படும் போக்கு வரத்து நெரிசலை தவிர்க்க, சுற்றுலா வாகன கட்டணத்தை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டுமென, சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்களை ரசிக்க, சுற்றுலா பயணியர் அதிக அளவில் வருகின்றனர். பெரும்பாலானோர் கார், பேருந்து, வேன், இருசக்கர வாகனம் ஆகியவற்றில் வருகின்றனர். சுற்றுலா வாகனங்களுக்கு நகராட்சி நிர்வாகம், நுழைவு கட்டணம் வசூலித்து வருகிறது. தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறையாகவும், விழா மற்றும் பண்டிகை காலமாகவும் உள்ள நிலையில், அதிக அளவில் வாகனங்கள் குவிகின்றன. இதனால், வாகன கட்டணம் வசூலிக்கப்படும் நகர நுழைவு இடங்களில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், உட்புற சாலைகளிலும் நெரிசல் ஏற்பட்டு, போக்கு வரத்து முடங்குகிறது. வாகன நுழைவு கட்டண வசூல் உரிம பொது ஏலம் நடத்தப்படாததால், தற்போது நகராட்சி நிர்வாகமே தற்காலிக ஊழியர்கள் மூலமாக வசூலித்து வருகிறது. இந்த வசூல் தொகையில், தினமும் பெருந்தொகை கையாடல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முந்தைய சப் - கலெக்டர் நாராயணசாமி, 'க்யூ.ஆர்.,' குறியீடு மூலமாக நுழைவு கட்டணம் வசூலிக்க அறிவுறுத்தியும், தற்போது வரை நுழைவுச்சீட்டு வழங்கியே வசூலிக்கின்றனர். இதற்கு முன், மாமல்லபுரத்தில் வாகனங்கள் அதிக அளவில் குவிந்தால், நெரிசலை தவிர்க்க, வாகன நுழைவு கட்டணம் வசூலிப்பதை தவிர்ப்பர். அந்த வகையில், தற்போதும் வாகனங்கள் அதிக அளவில் குவிந்து நெரிசல் ஏற்படுவதால், நுழைவு கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டுமென, சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி