குட்கா பொருள் விற்ற 3 கடைகளுக்கு சீல்
சென்னை, சென்னையில் வெவ்வேறு இடங்களில், தடையை மீறி குட்கா பொருட்கள் விற்ற, மூன்று கடைகளுக்கு, போலீசார் உதவியுடன், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.சென்னையில், தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மட்டுமின்றி, பதுக்கி வைத்திருப்பவர்களை அடையாளம் கண்டு, போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக, ஒவ்வொரு மண்டலத்திலும், இணை கமிஷனர் தலைமையில், 10 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார், உணவு பாதுகாப்பு அலுவலர்களுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எழும்பூர் மற்றும் சூளை பகுதியில், தடையைமீறி குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வந்த மூன்று கடைகளுக்கு, ராஜா தலைமையிலான உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று, 'சீல்' வைத்தனர்.அதேபோல், எழும்பூர் பாந்தியன் சாலை மற்றும் தமிழ்ச்சாலையில் நடைபாதை கடைகளில், தடைசெய்யப்பட்ட சிகரெட் விற்பனை செய்து வந்ததை, போலீசார் கண்டறிந்தனர். விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்ததுடன், அவர்களது கடையை மாநகராட்சி உதவியுடன் அகற்றினர்.இதுகுறித்து, கிழக்கு மண்டல இணை கமிஷனர் விஜயகுமார் கூறுகையில், ''தடையை மீறி குட்கா புகையிலைப் பொருட்கள் விற்பவர்கள் மீது, சட்டப்படி பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த, 15 நாட்களில் 16 கடைக்கு, 'சீல்' வைத்துள்ளோம்,'' என்றார்.