உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ராஜஸ்தான் நபரை அடைத்து வைத்து ரூ.5 லட்சம் பறிக்க முயன்ற 4 பேர் கைது

ராஜஸ்தான் நபரை அடைத்து வைத்து ரூ.5 லட்சம் பறிக்க முயன்ற 4 பேர் கைது

சென்னை, பிப். 23-ராஜஸ்தானில் துணிக்கடை நடத்தி வருபவர் பர்மான். இவருக்கு, சென்னை, ராயப்பேட்டையைச் சேர்ந்த முகமது காலித், 26, என்பவர், 'பேஸ்புக்' வாயிலாக பழக்கமானார். சில தினங்களுக்கு முன், பர்மானின் சகோதரி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.இதனால், பர்மான் மன விரக்தியில் இருந்துள்ளார். இதையறிந்த முகமது காலித், நம்பிக்கை அளித்து, சென்னைக்கு வரும்படி அழைத்துள்ளார்.கடந்த 19ம் தேதி சென்னை வந்த பர்மானை, முகமது காலித் தன் நண்பர் யுவராஜை அனுப்பி, திருவல்லிக்கேணி, சி.என்.கே., சாலையில் உள்ள விடுதியில் தங்க வைத்துள்ளார்.கடந்த 20ம் தேதி மதியம், முகமது காலித், யுவராஜ் ஆகியோர் பர்மானிடம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இருவர், தங்களை போலீஸ் என, அறிமுகப்படுத்தியுள்ளனர்.பின், முகமது காலித்தை கொலை குற்றவாளி எனக்கூறி தாக்கியதுடன், நீயும் அவனது கூட்டாளியா எனக் கேட்டு, பர்மானையும் தாக்கியுள்ளனர்.அப்போது, 'உன்மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றால், 5 லட்சம் ரூபாய் தர வேண்டும்' எனக்கூறி, கட்டிப்போட்டு அடித்து மிரட்டினர்.

திருப்பம்

இதற்கிடையே, விடுதியில் தங்கியிருந்த பர்மானை காண, ராஜஸ்தானைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் முகமது முனாஜுர் வந்துள்ளார். அப்போது, அவரையும் தாக்கி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். தன்னிடம், 6,000 ரூபாய் தான் உள்ளது என, ஓட்டுநர் கூறியதை அடுத்து, 'ஜிபே' வாயிலாக பணம் அனுப்ப வைத்துள்ளனர்.பின், அவரை மட்டும் அடித்து வெளியேற்றிவிட்டனர். நேற்று முன்தினம் காலை வெளியே வந்த லாரி ஓட்டுநர், இது குறித்து திருவல்லிக்கேணி போலீசில் புகார் அளித்தார்.உடனே, சம்பவ இடத்திற்கு போலீசார் வந்துள்ளனர். இதையறிந்த போலி போலீசார் மற்றும் முகமது காலித், யுவராஜ் ஆகியோர், பர்மானை அங்கேயே விட்டு தப்பிச் சென்றனர்.பர்மானை மீட்ட போலீசார், அவர் அளித்த தகவலின் அடிப்படையில், ராயப்பேட்டையைச் சேர்ந்த முகமது காலித், 26, யுவராஜ், 24, மற்றும் போலீசாக நாடகமாடிய திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சையது பசல் அகமது, 36, இர்பான் பாட்ஷா, 24, ஆகிய நான்கு பேரையும், நேற்று கைது செய்தனர்.அவர்களிடமிருந்து, 6,000 ரூபாய், இரும்பு கம்பி பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில், வேறு எவருக்காவது தொடர்பிருக்கிறதா என, போலீசார் விசாரிக்கின்றனர்.சம்பவம் குறித்து, இன்ஸ்பெக்டர் பிரகாஷ் கூறியதாவது:முகமது காலித் என்பவர், தன் நண்பர்களுடன் திட்டமிட்டு, பர்மானிடம் பணத்தை பறிக்கவே, ராஜஸ்தானில் இருந்து வரவழைத்துள்ளனர்.பின், விடுதியில் தங்க வைத்து, நண்பர்களுடன் சேர்ந்து நாடகமாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக முகமது முனாஜுர் வந்துள்ளார்.அவரிடம் இருந்த, 6,000 ரூபாயை பறித்து வெளியேற்றிய பின் தான், சம்பவம் தெரியவந்தது. பர்மானை மீட்டதுடன் குற்றவாளிகளை கைது செய்தோம்.இவ்வாறு அவர் கூறினார்.இர்பான் பாட்ஷாயுவராஜ்சையது பசல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை