84 வயது மூதாட்டிக்கு மிரட்டல் லஞ்ச தாசில்தார் மீது புகார்
கொளத்துார், கொளத்துார், வசந்தம் நகரைச் சேர்ந்தவர் நளினி, 65; ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் கணவர் சந்திரமோகனுடன் கடந்த 3ம் தேதி காலை அடையாறில் உள்ள தங்கை வீட்டிற்கு சென்றார். வீட்டில் நளினியின் தாய் சாந்தா, 84, தனியாக இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, ஒரு பெண் சாந்தாவிடம் வந்து தன்னை மேரி என அறிமுகம் செய்துள்ளார். பின், தாசில்தார் எனக்கூறி, கணவர் ராமரின் சொத்து குறித்து விசாரித்து, மிரட்டி சென்றுள்ளார். அவருடன் இருவர் இருந்துள்ளனர்.இதுகுறித்து நளினி, மிரட்டிய நபர்கள் குறித்து, கொளத்துார் போலீசில் புகார் அளித்தார்.மே மாதம் அடையாறு தாசில்தார் அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரின் சோதனையில், அடையாறு தாசில்தார் சரோஜா, அவரது கணவர் பிரவீன், அவரது நண்பர் அருண்குமார் ஆகியோர் கைதாகி, சிறையில் இருந்து வெளியே வந்துள்ளனர்.கைது செய்யப்பட்ட அருண்குமார் நளினியின் உறவினர். அருண்குமாருடன் ஏற்பட்ட கொடுக்கல் - வாங்கல் தகராறு தொடர்பாக, தாசில்தார் சரோஜா மற்றும் அவரது கணவர், நளினி வீட்டிற்கு வந்து மிரட்டிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.