ஆவின் பனீர் சமையல் போட்டி பிளஸ் 1 மாணவன் முதலிடம்
விருகம்பாக்கம், 'ஆவின்' தினத்தை முன்னிட்டு, விருகம்பாக்கத்தில் உள்ள 'ஆவின்' பாலகத்தில் பனீரை பிரபலப்படுத்தும் வகையில், மாவட்ட அளவிலான பனீர் சமையல் போட்டி நேற்று நடந்தது.சமையல் கலை நிபுணர்களான கவிஞர் கண்ணதாசனின் மகள் ரேவதி சண்முகம், பெர்லின் விக்டர், அருண் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர்.போட்டியில் பங்கேற்பாளர்கள், ஆவின் பனீரால் தயாரிக்கப்பட்ட பனீர் சாக்லேட் போளி, பனீர் அல்வா, பனீர் பொள்ளிச்சது, பனீர் பசந்தா, பனீர் ரசமலாய் உள்ளிட்ட விதவித உணவு வகைகளை, போட்டியின் விதிமுறைகள் படி வீட்டிலே சமைத்து எடுத்து வந்தனர்.இதில், 'பனீர் லபாப்தார்' தயாரித்து கொண்டு வந்த கெல்லீசை சேர்ந்த பிளஸ் 1 மாணவன் அப்டன் செல்வராஜ் முதல் பரிசையும்; ைஹதராபாத் பனீர் கிரேவி' செய்த, மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த இந்திரா இரண்டாம் பரிசையும், பனீர் பொள்ளிச்சது' செய்த வளசரவாக்கத்தை சேர்ந்த ஹர்ஷித், 23, மூன்றாம் பரிசையும் வென்றனர்.போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இந்நிகழ்வில், ஆவின் விற்பனை பிரிவு பொது மேலாளர் வனிதா; உதவி பொது மேலாளர் தியாகராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.ஆவின் தினத்தை கொண்டாடும் விதமாகவும், எங்கள் பனீரை பிரபலப்படுத்தும் வகையில், பனீர் கொண்டு செய்யப்படும் உணவு வகைகள் சமையல் போட்டியை நடத்தியுள்ளோம்.பிற நிறுவன பனீரை விட ஆவின் பனீர் தரம் மிகுதியாக இருக்கும். சமையல் போட்டியில் பங்கேற்ற அனைவரும், வித விதமான புதுவகையான பனீர் உணவு வகைகளை சமைத்திருந்தனர்.- வனிதா, பொது மேலாளர், ஆவின் விற்பனை பிரிவு.