மாஜி எம்.எல்.ஏ., கொலையில் தலைமறைவு குற்றவாளி கைது
சென்னை, முன்னாள் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பாலன் கொலை வழக்கில், தலைமறைவாக இருந்த குற்றவாளியை, போலீசார் கைது செய்தனர்.மயிலாப்பூர், அ.தி.மு.க., -- எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் எம்.கே.பாலன், 2000ம் ஆண்டில் தி.மு.க.,வில் சேர்ந்தார். 2001 ல், நடைபயிற்சி சென்றவர், கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில், அ.தி.மு.க., பிரமுகர் உட்பட, 16 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்று உறுதி செய்து, 2007ல் ஆயுள் தண்டனை விதித்தது.இதை எதிர்த்து, குற்றவாளிகள் சிலர், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அதன்படி, 2020 ஜூனில், உச்சநீதிமன்றம், ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. மூன்று வார காலத்திற்குள் சரணடையவுடம் உத்தரவிட்டிருந்தது. இதில், ஒன்பது பேர் சரணடைந்தனர். புளியந்தோப்பு தனிப்படை போலீசார், எம்.கே.பி., நகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், நேற்று தீவிர கண்காணிப்பில் இருந்தபோது, அப்பகுதியில் சுற்றித்திரிந்த வியாசர்பாடியைச் சேர்ந்த சோமசுந்தரம், 49, என்பவர் சிக்கினார். விசாரணையில், அவர் முன்னாள் எம்.எல்.ஏ., பாலன் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து, 1.5 கிலோ கஞ்சா மற்றும் ஒரு கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது.