மேலும் செய்திகள்
காக்கா ஆழி குறித்த தீர்ப்பாயம் விபரம் கேட்பு
31-Aug-2024
சென்னை, 'மீண்டும் மீண்டும் ஆய்வு நடத்தாமல், ஏற்கனவே உள்ள ஆய்வறிக்கை அடிப்படையில், காக்கா ஆழியை அழிப்பதற்கான செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்' என, தமிழக அரசின் தலைமை செயலருக்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.'தென் அமெரிக்க மஸ்ஸல் எனப்படும், காக்கா ஆழி வெளியிடும் துர்நாற்றம் உடைய கசடுகளால், இறால், மீன் உள்ளிட்ட கடல் உயிரினங்கள் வாழ முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், பழவேற்காடு ஏரி போன்ற உப்பங்கழிகளை நம்பியிருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, அவற்றை அழிக்க உத்தரவிட வேண்டும்' என, குமரேசன் சூளுரன் என்பவர், தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.இதை விசாரித்த தீர்ப்பாயம், 'தமிழக சுற்றுச்சூழல், நீர்வளம், மீன்வளம் ஆகிய துறைகளின் செயலர்கள், தமிழக சதுப்பு நில ஆணைய உறுப்பினர் செயலர், எண்ணுார், சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகங்களின் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி, காக்கா ஆழியை அழிப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்' என, தமிழக தலைமை செயலருக்கு உத்தரவிட்டது.இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:தலைமை செயலர் நடத்திய கூட்டத்தில், மத்திய மீன்வள ஆராய்ச்சி நிறுவனம், தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம், உவர் நீர் மீன் வளர்ப்பு மத்திய நிறுவனம் ஆகியவற்றின் வாயிலாக ஆய்வு நடத்தி, காக்கா ஆழியை அழிப்பதற்கான பரிந்துரைகளை பெற முடிவு செய்யப்பட்டதாக, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.டாக்டர் எம்.ஜி.ஆர்., மீன்வளக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலை ஆகியவை இணைந்து பொன்னேரி, எண்ணுாரில் காக்கா ஆழி எந்த அளவுக்கு பரவியுள்ளது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனமும் இது தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை அளித்துள்ளது.எனவே, இது தொடர்பாக மேலும் ஆய்வு எதுவும் தேவையில்லை. ஏற்கனவே உள்ள ஆய்வறிக்கையின் அடிப்படையில் காக்கா ஆழியை அழிப்பதற்கான செயல்திட்டத்தை தலைமை செயலர் உருவாக்க வேண்டும். செயல்திட்டம் எப்போது உருவாக்கப்படும் என்பதற்கான கால அளவை தலைமை செயலர் தெரிவிக்க வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை வரும் 6ல் நடக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
31-Aug-2024