ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தடுப்புகள் அகற்றி நடவடிக்கை
சென்னை':தென் சென்னையில், பல்வேறு நீர்நிலைகளில் இருந்து மழைக்காலத்தில் வெளியேறும் உபரிநீரை உள்வாங்கும் அமைப்பாக, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அமைந்துள்ளது.மழைக்காலத்தில் இங்கு வரும் வெள்ள நீர், ஒக்கியம் மடுவு வழியாக பகிங்ஹாம் கால்வாய்க்கு செல்லும். அதில் பயணித்து, முட்டுக்காடு முகத்துவாரத்தில் கடலில் கலக்கும்.அதே போல், கடலில் உயர் அலை சமயத்தில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நீர்மட்டம் உயரும். இது, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், உயிர் சூழல் சமநிலையை பராமரிக்க உதவும். இந்நிலையில், பழைய மாமல்லபுரம் சாலையில் மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.இதற்காக, ஒக்கியம் மடுவு மேல் அமைந்துள்ள பாலத்தின் அருகில், துாண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இப்பணிக்காக, இங்குள்ள பாலத்தின் கீழ்புறத்தில், நான்கு கண்கள் வழியாக தண்ணீர் சென்றுவரும் பாதையில் கட்டட கழிவுகள் கொட்டி அடைக்கப்பட்டது. ஒரு கண் வழியாக மட்டும், தண்ணீர் செல்ல அனுமதிக்கப்பட்டது.இது போதுமானதாக இல்லாததால், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. இதனால், இங்கு, நீல தாழைக்கோழி, பவளக்கால் உள்ளான், உள்ளிட்ட, 16 வகை பறவைகள் பாதிக்கப்பட்டன.சேறுடன் இருக்கும் பகுதியில், சிறிய புதர்களில் கூடு கட்டி முட்டையிட்டு இவை இனப்பெருக்கம் செய்யும். தண்ணீர் வெளியேறுவது தடைபட்டதால், பறவைகள் பாதிக்கப்பட்டது குறித்து, நம் நாளிதழில், ஆக., 8ல் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக மாநகராட்சி, நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கட்டட கழிவுகளை அகற்ற வேண்டும் என, மெட்ரோ ரயில் பணி ஒப்பந்ததாரர்களுக்கு, கெடு விதித்தனர். இதையடுத்து, ஒக்கியம் மடுவு பாலத்தின் கீழ்புறத்தில் ஏற்படுத்தப்பட்ட தடுப்புகள் தற்போது அகற்றப்பட்டு உள்ளன. இதனால், சதுப்பு நிலத்தில் உள்ளான் உள்ளிட்ட பல்வேறு வகை பறவைகள் முகாமிட்டுள்ளன.