உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தினமும் 3.27 லட்சம் பேருக்கு வீடு தேடி பூத் சிலிப் சுறுசுறுப்பு! லோக்சபா தேர்தல் பணியில் 21,000 ஊழியர்கள்

தினமும் 3.27 லட்சம் பேருக்கு வீடு தேடி பூத் சிலிப் சுறுசுறுப்பு! லோக்சபா தேர்தல் பணியில் 21,000 ஊழியர்கள்

சென்னை,சென்னையில் 'பூத் சிலிப்' வழங்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். ஏப்ரல் 13ம் தேதி வரை, தினமும் சராசரியாக 3.27 லட்சம் பூத் சிலிப்கள் வழங்கப்பட உள்ளன.சென்னை, வேப்பேரி ரித்தட்சன் சாலையில், சென்னை மாவட்ட வாக்காளர்களுக்கு, பூத் சிலிப் என்ற வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணியை, மாநகராட்சி கமிஷ்னரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ராதாகிருஷ்ணன் வழங்கி, நேற்று துவக்கி வைத்தார்.அப்பகுதியில், வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருந்ததால், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் பேசி, ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு ராதாகிருஷ்ணன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

வாக்களர் கையேடு

பின், அவர் கூறியதாவது:சென்னை மாவட்டத்தில், 16 சட்டசபை தொகுதிகளில், 19.28 லட்சம் ஆண், 19.95 லட்சம் பெண், 1,199 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என, 39.25 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி இன்று துவங்கி, 13ம் தேதி வரை நடக்கிறது. தினமும் சராசரியாக 3.27 லட்சம் பூத் சிலிப்கள் வழங்கப்பட உள்ளன.இந்த பூத் சிலிப்பில், ஓட்டுப்பதிவு மையம் அமைந்துள்ள இடம், வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் காணப்படும் விபரம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. வாக்காளர் தகவல் சீட்டுகளை வழங்கும்போது, ஒரு வீட்டிற்கு தலா ஒன்று என்ற விகிதத்தில் வாக்காளர் கையேடும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளின்போது, வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கும் தீர்வு காணப்படும்.சென்னையில், 398 ஓட்டுச்சாவடி மையங்களில், 3,726 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இந்த பூத் சிலிப் வழங்கும் பணி 299 மண்டல குழு அலுவலர்கள் வாயிலாக வழங்கப்படுகிறது.இதற்கென 364 கண்காணிப்பாளர்கள், 3,719 களப்பணியாளர்கள் என, 4,083 பேர் பணியாற்றி வருகின்றனர். தேர்தல் பணிக்கு 19,397 பணியாளர்கள் தேவை என கணக்கிட்டு, 20,016 பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.இதில், 87 சதவீதம் பேர் முதற்கட்ட பயிற்சியில் பங்கேற்றனர். 1,500 பணியாளர்கள் மட்டுமே பயிற்சிக்கு வரவில்லை. உடல் நலக்குறைவு, பணியிட மாற்றம், குடும்ப நிகழ்ச்சிகள் போன்ற காரணங்களால் பங்கேற்க முடியாத நிலை இருக்கலாம். உரிய விளக்கம் பெறப்பட்டு, அதன்பின் நடவடிக்கை எடுக்கப்படும்.சென்னையில், 579 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை. இந்த வார இறுதிக்குள், மேலும் சில ஓட்டுச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவை என, தேர்தல் பார்வையாளர்களால் அடையாளம் காணப்பட்டு, அப்பட்டியலில் சேர்க்கப்படும்.

அதிகாரமில்லை

உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட பணத்தின் அளவு 50,000 ரூபாயை உயர்த்துவதா என்பதை தேர்தல் கமிஷன் தான் முடிவு செய்யும். ஆதாரத்தோடு பணத்தை எடுத்துச் செல்ல வேண்டும். கோயம்பேடு போன்ற சந்தையில் இருந்து ஒருவர் ஒரு லட்சம் ரூபாய் எடுத்து செல்வதாக இருந்தால், இரண்டு தவணைகளில் தலா 50,000 ரூபாயாக எடுத்து செல்லலாம்.சென்னையை பொருத்தவரை மனிதாபிமான முறைப்படி, உடல்நலக் குறைவு போன்ற நியாமான காரணங்களுக்காக ஆவணமின்றி பணம் எடுத்து செல்வோர் குறித்து, தேர்தல் பறக்கும் படையினர் உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தெரிவித்து, அப்பணத்தை விடுவித்து விடுகின்றனர்.எங்களுக்கு சில விதிகள் உண்டு. தேர்தல் கமிஷன் விதிகளை மீறி செயல்பட அதிகாரம் இல்லை. திருமணம், மருத்துவம் போன்ற செலவுகளுக்காக பணத்தை விரைந்து வழங்குவதற்காக வருமான வரி துறை, வங்கி, வருவாய் துறை, மாநகராட்சி அதிகாரிகள் இணைந்த கூட்டுக்குழு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.9.14 கோடி பறிமுதல்!

தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு வாயிலாக, நேற்று முன்தினம் வரை, 3.36 லட்சம் ரூபாய், 5.56 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொபைல் போன்கள், 7.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கணினிகள் உட்பட 9.14 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வட, தென் சென்னை தொகுதியில் தலா 3

மத்திய சென்னைக்கு 2 ஓட்டு இயந்திரம்வட சென்னையில் 35 வேட்பாளர்கள், தென்சென்னையில் 41 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எனவே, இந்த இரு தொகுதிகளின் ஓட்டுச்சாவடிகளில் தலா மூன்று ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.மத்திய சென்னையில் 31 வேட்பாளர்கள் என்பதால் அங்கு, இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. ஓட்டுச்சாவடிகளில், 20,016 பேர் பணியாற்ற உள்ளனர். அவர்களுக்கு, குலுக்கல் முறையில் ஓட்டுச்சாவடி இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.கூடுதலாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படும் தொகுதிகளில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று கணினி குலுக்கல் முறையில் தேர்வு நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ