தி.நகர், தி.நகர் ரங்கநாதன் தெருவில், ஆக்கிரமிப்புகளை அகற்ற அகற்ற மீண்டும் முளைப்பதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னையின் வர்த்தக மையமான தி.நகருக்கு, தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில், மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.தி.நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததால், 131 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து மாம்பலம் ரயில் நிலையம் செல்ல, ஆகாய நடைபாதையும் அமைக்கப்பட்டது. அத்துடன், மெட்ரோ ரயில் பணிகளும் நடைபெற்று வருவதால், தி.நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.இதனால் பர்கிட் சாலை, வெங்கட் நாராயணன் சாலை, பனகல் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில், கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.அதேபோல், தி.நகரின் வர்த்தக மையமான ரங்கநாதன் தெரு, நடேசன் தெருவில், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளன. கடந்த இரு வாரங்களுக்கு முன், மாநகராட்சி சார்பில் ரங்கநாதன் தெருவில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.ஆனால், தற்போது மீண்டும் ஆக்கிரமிப்பு கடைகள் முளைத்துள்ளன.ரங்கநாதன் தெருவின் நடுவே, சிலர் கடைகளை அமைத்துள்ளனர். இதனால், அங்கு வரும் வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.இத்தெருக்களில் நிறுத்தப்படும் வாகனங்களை, போக்குவரத்து போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர்.இருந்தும், சாலையோரத்தை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவது குறையவில்லை.எனவே, ரங்கநாதன் தெரு மற்றும் தி.நகரை சுற்றுள்ள தெருக்களில் ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.சுழற்சி முறைதி.நகரில் ஒவ்வொரு தெருவாக, தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. ரங்கநாதன் தெருவில் சில வாரங்களுக்கு முன், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆனாலும், மீண்டும் மீண்டும் ஆக்கிரமிப்பாளர்கள் அங்கு கடை வைக்கின்றனர். இதனால், சுழற்சி முறையில் மீண்டும் அத்தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை தொடர உள்ளோம்.- மாநகராட்சி அதிகாரிகள்