ஆவின் பாலகத்திற்கு விண்ணப்பம் மாற்றுத்திறனாளி அலைக்கழிப்பு
சென்னை, ஆவின் பாலகம் திறக்க அனுமதி கேட்டு, சென்னை கலெக்டரிடம் விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி ஒருவரை, மூன்று ஆண்டுகளாக அலைக்கழித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பிராட்வேயில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் வருவாய்த்துறை அலுவலகங்களில், அரசாணைப்படி ஆவின் பாலகம் திறக்க அனுமதிக்க வேண்டும் என, மாற்றுத்திறனாளிகள், சென்னை கலெக்டருக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், திருவொற்றியூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான சரவணன், 34, என்பவர், ஆவின் பாலகம் திறக்க அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளார். ஆனால், மூன்று ஆண்டுகளாக, அவரை அலைக்கழித்து வருவதாக கூறப்படுகிறது.இதுகுறித்து, சரவணன் கூறியதாவது:மாற்றுத்திறனாளிகளுக்கு, பெரிய அளவில் வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. பெரும்பாலானோர் சுயதொழில் செய்து தான் பிழைக்கின்றனர். இதற்காக தான், கலெக்டர் அலுவலகத்திலும், வருவாய் அலுவலகங்களிலும் ஆவின் பாலகம் திறக்க அனுமதி கேட்கிறோம். அலுவலகத்தில் அரசாணைப்படி, இடம் மட்டும் தான் கேட்கிறோம். வங்கி மூலமாக கடன் பெற்று தொழில் துவங்குவோம். இதனால், படித்த வேலைவாய்ப்பற்றோர் பயனடைவர். இதுதொடர்பாக, சென்னை கலெக்டருக்கு தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக, கோரிக்கை மனு அளித்து வருகிறோம். அரசு எங்களது கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.