அரும்பாக்கம்:அதிகாரிகளின் மெத்தனப் போக்கால், எம்.எம்.டி.ஏ., காலனி பிரதான சாலையில், நடைபாதையில் இருந்த தடுப்பு கற்களை உடைத்து, வியாபாரம் நடக்கிறது.சென்னை, அண்ணா நகர் மண்டலம், அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனியில், விநாயகபுரம் பிரதான சாலை உள்ளது. எம்.எம்.டி.ஏ., காலனி - 100 அடி சாலையை இணைக்கும் இந்த பிரதான சாலையில், இருபுறங்களிலும் நடைபாதையில் மெக்கானிக் கடைகள், உணவகம், டீ கடைகள் என, பலவிதமாக கடைகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு உள்ளன. இதனால், பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல், சாலையில் அச்சத்தில் நடந்து செல்கின்றனர். எனவே, நடைபாதை ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:எம்.எம்.டி.ஏ., காலனியில், சாலை முழுதும், 10 மீ., இடைவெளியில் 20 இடங்களில், 'நடைபாதை நடப்பதற்கே' என இருபுறமும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.ஆனால், நடைபாதையில் இருந்த தடுப்பு கற்களை உடைத்து, ஆக்கிரமிப்பு கடைகள் விரிவுபடுத்தப்பட்டு உள்ளன. இதை தடுக்க வேண்டிய மாநகராட்சியினர், வேடிக்கை பார்க்கின்றனர்.அதேபோல், நடைபாதை மற்றும் சாலை முழுதும் வாகனங்கள் வரிசைகட்டி நிறுத்தப்படுவதால், பாதசாரிகள் சாலையில் நடந்து சென்று, விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, ஆக்கிரமிப்பு கடைகளை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.